×

திருவண்ணாமலை மலைமீது மகாதீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோருக்கு மட்டும் மலையேற அனுமதி * மரபு மாறாமல் 11 நாட்கள் தீபம் காட்சிதரும் * கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தகவல் மலையில் ஈரப்பதம் இருப்பதால் மண்சரிய வாய்ப்பு

திருவண்ணாமலை, டிச.12: திருவண்ணாமலை மலைமீது மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டும் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு மலையேற அனுமதியில்லை. மரபு மாறாமல் 11 நாட்கள் தீபம் காட்சிதரும் என கலெக்டர் தெரிவித்தார். திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி முதல் சிறப்பாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 13ம் தேதி (நாளை) மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். மலையில் மலைச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தால் மலையின் உறுதித்தன்மைையை ஆய்வு செய்யவும், பக்தர்களை மலையேற அனுமதிப்பது ெதாடர்பாகவும் ஆய்வு செய்ய, புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர்கள் கொண்ட 8 பேர் குழு அமைக்கப்பட்டு, மலையில் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர்.

அதில், மலையின் மேற்பகுதியில் அதிக ஈரப்பதம் இருப்பதாகவும், பாறைகள் உருண்டு விழும் ஆபத்தும், மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்தும் இருப்பதாக எச்சரித்துள்ளனர். அதோடு, மலையில் நடக்கிற பாதையில் கால்கள் அமிழ்கின்ற அளவில் மண் இலகுவாக ஈரத்தன்மையுடன் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, வழக்கமாக ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் 2,500 பேரை இந்த ஆண்டு அனுமதிக்கப்படவில்லை. மேலும், திருக்கோயில் சார்பில் மகா தீபம் ஏற்றுவதற்காக மலைக்கு செல்லும் பணியாளர்கள் மட்டும் கட்டுப்பாடுடன் தேவையான எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவார்கள்.

தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடும் நபர்களின் பட்டியலை பெற்று, அவர்கள் மட்டும் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மேலும், காவல்துறையினர், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், மருத்துவ குழுவினர் பாதுகாப்புக்காக உடன் செல்ல உள்ளனர். தீபம் ஏற்றியவர்கள் தொடர்ந்து இந்த ஆண்டும் மலைமீது தீபம் ஏற்றுவார்கள். காப்பரை, நெய், திரி எடுத்து செல்லும் வழக்கமான பணியாளர்கள், இந்த ஆண்டும் எடுத்து செல்வார்கள். அவர்களுக்குரிய பாதுகாப்பு வழங்கப்படும். தீப கொப்பரையை தீபம் ஏற்றுவதற்கு முதல் நாளில்(இன்று) மலைமீது எடுத்துச்செல்வது வழக்கம். மழை வந்தால் அதற்குரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் வழக்கம் போல, திருக்கோயில் மரபுபடி 11 நாட்கள் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post திருவண்ணாமலை மலைமீது மகாதீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோருக்கு மட்டும் மலையேற அனுமதி * மரபு மாறாமல் 11 நாட்கள் தீபம் காட்சிதரும் * கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தகவல் மலையில் ஈரப்பதம் இருப்பதால் மண்சரிய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mahadipam ,Tiruvannamalai Mountain ,Deepam Kashidarum ,Tiruvannamalai ,Maha Deepam ,Collector ,Baskara Pandian ,Tiruvannamalai Hill ,Mount Mansaraya ,
× RELATED திருவண்ணாமலையில் மண்சரிவு...