- சாத்தனூர் அணை
- தென்பெண்ணை ஆறு
- சென்னை
- பென்ஜால்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- விழுப்புரம்
- கடலூர்
- கள்ளக்குறிச்சி
- Marakanam
- வேலூர்
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- தின மலர்
* கரையோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
* 13 ஆயிரம் ஏக்கர் சம்பா மூழ்கியது
* 1 லட்சம் மீனவர்கள் முடக்கம்
சென்னை: தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மரக்காணம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வயல்களிலும் மழைநீர் தேங்கியது. நேற்று மாலை 4.30 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பனார் கோயிலில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2ம் நாளாக நேற்று மாலை வரை மழை நீடித்தது. அதிகபட்சமாக கோடியக்கரையில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. மீன்வளத்துறை எச்சரிக்கையால் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம் அதிகாலை முதல் நேற்று மதியம் 2 மணி வரை தொடர்ந்து அடைமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கினர்.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் கோட்டூர் ஒன்றியங்களில் 1000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடியில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்தது. அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 7.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகபட்சமாக வந்தவாசியில் 39 மிமீ மழை பதிவானது.
கடந்த நவ.30 மற்றும் டிச.1ம் தேதிகளில் பெஞ்சல் புயல் மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், அணைகள் நிரம்பியுள்ளன. அதன்தொடர்ச்சியாக, நேற்று முதல் பெய்துவரும் மழையால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 8000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 119 அடியில், தற்போது 116.75 அடி நிரம்பியுள்ளது. அணையின் நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடியில் தற்போது 6,821 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி உபரி நீர் தென்பெண்ணையாற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
அதனால், ஆற்றின் இரு கரையையும் தொட்டபடி மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கெளமஞ்சனூர், புத்தூர்செக்கடி, திருவடத்தனூர், ராயண்டபுரம், தொண்டமானூர், அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம் போன்ற கிராமங்களுக்கும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களுக்கும் பொதுப்பணித்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை ஊழியர்கள் சாத்தனூர் அணைக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதை சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.
மழை தொடரும் வாய்ப்பு இருப்பதால், வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், செண்பகத் தோப்பு அணை, குப்பநத்தம் அணை, மிருகண்டா அணை ஆகியவையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே, செய்யாற்றிலும் கமண்டலநாக நதியிலும் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கடலூரில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்த நிலையில், நேற்று பகலில் விட்டுவிட்டு மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்கள் வரவில்லை. மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட சுற்று வட்டாரத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியது.
மரக்காணம் பேருந்து நிலையம் அருகிலுள்ள சாந்தசொரூப ஆஞ்சநேயர் கோயிலில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் பக்தர்கள் வெளியில் நின்றபடியே சுவாமி தரிசனம் செய்தனர். மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை விடியவிடிய நீடித்தது. நேற்று பகலிலும் மழை தொடர்ந்த நிலையில் தொடர் மழையால் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கல்வராயன்மலை பகுதியில் பெரியார் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. அதிகாலை லேசான மழை துவங்கிய நிலையில் 7 மணிக்கு பிறகு கனமழை பெய்தது. நெல்லையில் சந்திப்பு, டவுன், பேட்டை, மேலப்பாளையம், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முழுவதும் அடைமழை பெய்தது. இதனால் பாளை. பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், நெல்லை வண்ணார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், பணகுடி, களக்காடு, ஏர்வாடி, சேரன்மகாதேவி, அம்பை, சுத்தமல்லி ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டியது. தூத்துக்குடி மாவட்டத்திலும் சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி, ஆத்தூர், ஏரல், திருவைகுண்டம், செய்துங்கநல்லூர், வல்லநாடு, தூத்துக்குடி, எட்டயபுயரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சுரண்டை, புளியங்குடி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் லேசான மழை பெய்தது.
ரெட் அலர்ட் எச்சரிக்கையால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் பரவலாக மழை பெய்தது. இரவு தொடங்கிய மழை விடிய, விடிய தொடர்ந்து நேற்றும் பகல் முழுவதும் இடைவெளி விட்டு பெய்தது. மாவட்டத்தில் தொண்டியில் 38.20 மி.மீ, திருவாடானையில் 35.60 மி.மீ, ராமநாதபுரத்தில் 24.00 மி.மீ, பரமக்குடியில் 32.40 மி.மீ, கடலாடியில் 22.80 மி.மீ, முதுகுளத்தூரில் 20.00 மி.மீ, கமுதியில் 11.40 பதிவாகியுள்ளது. பகல் முழுவதும் தொடர்மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள், பொதுமக்கள் நடந்து செல்ல அவதிப்பட்டனர். மாவட்டத்திலுள்ள அனைத்து கடற்கரை கிராமங்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதபோல மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நேற்று அதிகாலை துவங்கி பகல் முழுவதும் பரவலாக மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று காலை முதல் சூறைக் காற்றுடன் சாரல் மழை பெய்தது.
அவ்வப்போது கனமழையும் பெய்த நிலையில், குளிரும் வாட்டி வதைத்து வருகிறது. மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாள் அனுமதி ரத்து ெசய்யப்பட்டது. ஊட்டி-குன்னூர் இடையே மலை ரயில் தண்டவாளத்தில் கற்பூர மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை பாதித்தது. மரம் அகற்றப்பட்டதை தொடர்ந்து சுமார் 1 மணி நேர தாமதத்திற்கு பின்பு ரயில் மேட்டுப்பாளையம் புறப்பட்டு சென்றது.இந்நிலையில், இன்றும், நாளையும் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாமக்கல்லில் காலை முதல் பிற்பகல் 3 மணிவரை இடைவிடாமல் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் காலை முதலே இடைவிடாமல் லேசான மழை பெய்தபடி இருந்தது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால், நேற்று 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என கலெக்டர் தர்ப்பகராஜ் எச்சரித்துள்ளார்.
* சுவர் இடிந்து, மின் கம்பி மிதித்து சிறுவன், முதியவர் பலி
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே செம்பியன்மகாதேவி விநாயகன் தோப்பு தெருவை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி லட்சுமி. மகன் கவியழகன்(13). மகள் சிவ(9). நேற்றுமுன்தினம் நள்ளிரவு கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் கவியழகன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முருகதாஸ், சிவஸ்ரீ ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி ராமத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (75). கட்டிடத் தொழிலாளியான இவர், நேற்று உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ள பயணியர் நிழற்குடையில் பேருந்திற்காக காத்திருந்தார்.
இயற்கை உபாதையை கழிக்க சென்றவர், பலத்த காற்றுடன் பெய்த மழையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து பலியானார். கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மூங்கில் துறைப்பட்டு பகுதியில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் பெருந்துறைபட்டு செல்லும் மின்கம்பிகள் முழுவதுமாக சேதமடைந்தன. இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகரை சேர்ந்த தற்காலிக பணியாளர் திலீப்குமார் (44) வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி நடக்கிறது.
* குற்றாலத்தில் குளிக்க தடை
தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே தென்காசி, குற்றாலம் பகுதிகளில் மழை பெய்ய துவங்கியது. இதனால் மதியம் முதல் குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய மூன்று அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
* வீராணம் ஏரியில் 2200 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி சென்னையின் முக்கிய ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தொடர் மழையால் வீராணம் ஏரி நிரம்பி வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 45.60 அடியாக உள்ளது. இந்நிலையில் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு ஓடைகள், மதகு வழியாக சுமார் 2200 கன அடி உபரிநீரை வெளியேற்றி வருகின்றனர். விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் சென்னை குடிநீருக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
* புதுச்சேரியில் அலர்ட்
புதுச்சேரியில் நேற்று மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனை செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மழை காரணமாக தற்காலிக பஸ் நிலையம் சேறும், சகதியுமாக காணப்பட்டது. கடல் அலைகள் சீற்றமாக இருந்ததால், கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர். சாத்தனூர் மற்றும் வீடூர் அணை சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால், சாத்தனூர் அணையில் இருந்த உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் வீடூர் அணையில் இருந்தும் உபரநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது.
* திருச்செந்தூரில் 70 அடி தூரம் உள்வாங்கிய கடல்
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே அய்யா கோயில் பகுதியில் நேற்று மதியம் சுமார் 70 அடி தூரம் கடல் உள்வாங்கியது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் அங்கு நீராடினர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
The post சாத்தனூர் அணையில் இருந்து 13,000 கனஅடி நீர் திறப்பு தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: பல மாவட்டங்களில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.