×

ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் சிஇ 20 இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்

சென்னை: ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் சிஇ 20 இன்ஜின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு சந்திரயான் 3, ஆதித்யா எல்-1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதனை படைத்தது. அதை தொடர்ந்து தனது கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. பலகட்ட சோதனைகள், விண்வெளி வீரர்களை தேர்வு செய்து பயிற்சி என திட்டம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இத்திட்டத்திற்கான கிரையோஜெனிக் சிஇ20 இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:கடந்த 29ம் தேதி கிரையோஜெனிக் சிஇ20 இன்ஜினின் கடல் மட்டத்திலான வெப்ப சோதனை வெற்றிகரமாக நடந்தது. அப்போது இன்ஜினை ரீஸ்டார்ட் செய்வதற்கு தேவையான சோதனையும் செய்யப்பட்டது. கடல் மட்டத்திலான இச்சோதனை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் செய்யப்பட்டது. கிரையோஜெனிக் இன்ஜினை ரீஸ்டார்ட் செய்வது ஒரு சிக்கலான செயல். இச்சோதனை வெற்றி பெற்றுள்ளது. அப்போது இன்ஜின் இயல்பானதாக இருந்தது. அதன் செயல்பாடுகள் எதிர்பார்த்தபடி இருந்தது.

சோதனையின் சிறப்பம்சங்களில் ஒன்று, விண்வெளியில் இயந்திரத்தை மறுதொடக்கம் செய்யும் திறனுக்கு இன்றியமையாத பல-உறுப்பு பற்றவைப்புக்கான திறன் ஆகும். இந்த கண்டுபிடிப்பு சிக்கலான பணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்கிறது. கூடுதலாக, கடல்மட்ட சோதனையின் போது அதிர்வுகள் மற்றும் வெப்ப அழுத்தம் போன்ற சவால்களை எதிர்கொள்ள ஒருமுனை பாதுகாப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு சோதனையை எளிதாக்குகிறது மற்றும் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை பராமரிக்கும் போது செலவுகளை குறைக்கிறது. இன்ஜின் மற்றும் சோதனை வசதி குறைபாடற்ற முறையில் செயல்பட்டது. எதிர்பார்க்கப்படும் செயல்திறன் அளவுருக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் சிஇ 20 இன்ஜின் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : Gaganyaan ,ISRO ,CHENNAI ,Indian Space Research Organization ,Kaganyan ,Dinakaran ,
× RELATED இஸ்ரோ தலைவராக நாராயணன் பொறுப்பேற்பு: தமிழகத்தை சேர்ந்தவர்