×

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடையால் ஏமாற்றம்

சேந்தமங்கலம் : கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடையால் ஏமாற்றம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலத்திற்கு, தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

கொல்லிமலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையின் காரணமாக சீதோஷ்ண நிலை மாறி இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. மதியத்தில் இதமான சூழ்நிலை இருந்து வருகிறது. அதிகாலை முதல் காலை 10 மணி வரை வரை மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் இருந்து வருகிறது. அடிவாரத்தில் இருந்து மேலே வரும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே செல்கின்றனர். விடுமுறை தினமான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிக அளவில் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனபாறை அருவிகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனர்.

அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில்களில் சாமிதரிசனம் செய்துவிட்டு, தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம் சுற்றிப் பார்த்துவிட்டு வாசலூர்பட்டி ஏரியில் குழந்தைகளுடன் படகு சவாரி செய்தனர். மாலை வீடு திரும்பும் பொழுது சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் மிளகு, தேன், அன்னாசி, கொய்யா, மலை வாழைப்பழம், பலா உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.

The post கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடையால் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kollimalai ,Agaya Ganga Falls ,Senthamangalam ,Namakkal District ,Tamil Nadu ,Andhra Pradesh ,Kerala ,Karnataka ,Pondicherry ,
× RELATED கொல்லிமலை வனப்பகுதியில் டிரோன் கேமராவில் படம் பிடித்த 2 பேருக்கு அபராதம்