×

போப் பிரான்சிசால் கார்டினலாக நியமிக்கப்பட்ட கேரள பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: கேரள பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட் மதிப்புமிக்க கார்டினலாக நியமனம் செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கத்தோலிக்க தலைமை குருவாக போற்றப்படும் போப் பிரான்சிசுக்கு ஆலோசனை கூறவும், கத்தோலிக்க மதத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதிலும் கார்டினல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. போப் தேர்வில் ஓட்டு போடும் தகுதியும் கார்டினல்களுக்கு உண்டு. பல்வேறு மறை மாவட்டத்திற்கு தலைமையாக கார்டினல் செயல்படுவார். உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கார்டினல்கள் தேர்வு செய்யப்பட்டு போப்பால் நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்த முக்கிய கார்டினல் பொறுப்பில் இந்தியாவில் இருந்து கேரளாவின் செங்கனாச்சேரியை சேர்ந்த மான்சிக்னார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட் (51) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று வாடிகனில் நடந்தது. ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட்டுக்கு போப் பிரான்சிஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புகழ்பெற்ற செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் நடைபெற்ற இந்த விழாவில், உலகெங்கிலும் உள்ள மதகுருமார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர், மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 புதிய கார்டினல்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் இந்திய குழுவினர் சார்பில் ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தலைமையில் காங்கிரஸ் எம்பி கொடிக்குனில் சுரேஷ், ராஜ்யசபா எம்பி சதம்சிங் சாந்து, பாஜகவை சேர்ந்த அனில் ஆண்டனி உள்ளிட்டோர் வாடிகன் சென்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட்டை போப் பிரான்சிஸ் நியமித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கார்டினலாக நியமிக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட்டுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களை தேர்வு செய்தது, இந்தியாவுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மனிதகுல சேவைக்காக தன்னை அர்ப்பணித்துள்ள ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட்டிற்கு எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 1973ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பிறந்த ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட், பாதிரியாராக அல்ஜீரியா, தென் கொரியா, ஈரான், கோஸ்டா ரிகா மற்றும் வெனிசுலாவில் போன்ற நாடுகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post போப் பிரான்சிசால் கார்டினலாக நியமிக்கப்பட்ட கேரள பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Modi ,Kerala ,George Jacob ,Cardinal ,Pope Francis ,New Delhi ,George Jacob Govacad ,
× RELATED கண்ணூரில் தண்டவாளத்தில் படுத்து...