×

வேட்பு மனுவில் தகவல் மறைப்பு வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மனு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல. வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. இந்த புகாரே விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

The post வேட்பு மனுவில் தகவல் மறைப்பு வழக்கு தொடர அனுமதியளித்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மனு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : EPS ,Chennai ,General Secretary ,Edapadi Palanichami ,Adimuka ,Edapadi ,Dinakaran ,
× RELATED போதை பொருள் விவகாரத்தில் இபிஎஸ்...