மித்ர நந்த சப்தமி -7.12.2024 – சனி
கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி (7.12.2024) நந்த சப்தமி! இந்நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் உறைந்திருப்பார்கள் என்கிறது வேதம். கோமாதாவின் நான்கு கால்கள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. செல்வ வளம் தரும் மகாலட்சுமி அதன் பின்பாகத்தில் வசிக்கிறாள். மாடுகளைப் போற்றி வளர்க்கும் இல்லங்களில், மகாலட்சுமி மகிழ்ந்துறைவாள். பஞ்சகவ்யம் (பால், தயிர், நெய், சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கு உகந்தது; மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் காலடி பட்ட இடம் பரிசுத்தமாகும். மேய்ந்து, வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை, நல்லதொரு வேளையாக ‘முகூர்த்த சாஸ்திரம் சொல்கிறது. அதேபோல். நாம் செய்த பாவங்கள் அகல. ‘கோ’ தானம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.கோமாதாவான பசுவை வழிபடுவது குறித்து உள்ள ஸ்லோகம்:
காம் சத்ருஷ்டவா நமஸ்க்ருத்ய க்ருத்வா சைவ பிரதக்ஷிணம்
ப்ரதக்ஷிணீக்ருதா தேன ஸப்தத்வீபாவஸுந்தரா
ஸர்வ காமதுகே தேவி ஸர்வதீர்த்தா பிஷேசினீ
பாவனே ஸுரபிஸ் ரேஷ்டே தேவிதுப்யம் நமோஸ்துதே’
தெய்வப்பிறவியான பசுவை வணங்கி, அதனை வலம் வந்து துதித்தால் ஏழு தீவுகளுடன் கூடிய பூமியை வலம் வந்த புண்ணியம் கிட்டும். நற்குணங்கள் நிரம்பிய அமுதம் போன்ற பாலை நல்கும் பசுவை வழிபட்டால் நம் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். இந்த வழிபாடு அனைத்துப் புண்ணிய நதிகளில் நீராடிய பலனைத் தரவல்லது. நம்மைப் பரிசுத்தம் செய்யக்கூடியவள் இந்தப் பசு. கேட்டதை யெல்லாம் அருளும் காமதேனுவாகத் துலங்கும் கோமாதாவே உன்னை வணங்குகிறேன். கோ பூஜையை முறையாக செய்ய இயலாதவர்கள், பசுவின் கழுத்திலும் தலையிலும் தடவிவிட்டு, பின்புறம் தொட்டு நமஸ்காரம் செய்தால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும்.
மைதுலாஷ்டமி – 8.12.2024 – ஞாயிறு
மைதுலாஷ்டமி நாளில் பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல். முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து விரதம் இருந்து வழிபடுதல். நவக்கிரக மண்டபத்தில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பு.
நாலாவது சோமவாரம் 9.12.2024 – திங்கள்
இது இந்த ஆண்டின் கடைசி சோமவாரம். அவசியம் சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். சிவனுக்கு சோம சுந்தரன் என்று ஒரு திருநாமம். சோமன் என்பது சந்திரனைக் குறிக்கும். ஒவ்வொரு சோம வாரமும் (திங்கட்கிழமை) சிவனுக்கு விசேஷமான நாள் எனினும் கார்த்திகை மாத சோமவாரம் வெகு சிறப்பு. அதுவும் 4 வது சோமவாரம் அற்புத பலன்களைத் தரக்கூடியது. க்ஷயரோகத்தில் (தொழுநோய்) துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம்பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு
‘சந்திரசேகரர்’ என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல் வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத் துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். சிவாலயங்களில் ‘சங்காபிஷேகம்’ நடைபெறும். சந்திர
சேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக் காட்டுகின்றனர். கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் சந்திரசேகர மூர்த்திக்கு வெண் மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தி அடைவதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும்.
திருவண்ணாமலை தேர் 10.12.2024 – செவ்வாய்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த வருடத்துக்கான கார்த்திகை தீபத் திருவிழாவில் இன்று திருத்தேர் கோயிலின் பெரிய தேர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ அருணாசலேஸ்வரா் தேர். 59 அடி உயரம் கொண்ட ஸ்ரீ அருணா சலேஸ்வரர் தேர் புதுப்பிக்கப்பட்டது. உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி வலம் வரும் இந்த மகா ரதத்தின் உயரம் 59 அடியும், 200 டன் எடையும் கொண்டதாகும். தேர் சக்கரத்தின் விட்டம் மட்டுமே 9 அடி என்கிறார்கள்.
கைசிக குருவாயூர் ஏகாதசி 11.12.2024 – புதன்
இந்த ஏகாதசி குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குருவாயூரில் குருவாயூர் கேசவன் என்று அழைக்கப்பட்ட கஜராஜன் மறைந்த நாள் குருவாயூர் ஏகாதசி நாளாகும். அதனால் அந்த நாள் குருவாயூர் கேசவனின் நினைவு நாளா கவும் குருவாயூரில் அனுசரிக்கப்படு கிறது. குருவாயூர் ஏகாதசியை முன்னிட்டு, ஒரு மாதம் முன்பிருந்தே குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் விளக்கேற்றும் உத்ஸவமும் ஆரம்பித்து நடைபெறுகிறது. கோயில் முழுவதும் லட்சக்கணக்கான விளக்குகளால் ஜகஜ்ஜோதியாக ஜொலிக்கிறது. இரவு நேரத்தில் எப்போதும் போல் ‘யானை சீவேலி’ என்றழைக்கப்படும் பிரதட்சணம் உண்டு. யானையின் மேல் ஒரு அர்ச்சகர் கையில் குருவாயூரப்பன் படத்தை வைத்துக்கொண்டு உட்கார, அந்த யானை பிரதட்சணமாக கோயில் உள்ளே வலம் வரும். ஏராளமான பக்தர்கள் கூடியிருந்து ‘யானை சீவேலி’யை தரிசிப்பார்கள்.இன்று மகாலட்சுமி உற்பத்தி தினம் என்று சொல்கிறார்கள். பாற்கடலைக் கடைந்தபோது பல்வேறு பொருட்கள் உற்பத்தி ஆயின. நிறைவாக மகாவிஷ்ணு மார்பில் அமர்வதற்காக கமல மலரில்லட்சுமித் தாயார் பாற்கடலில் தோன்றிய நாள் இந்த ஏகாதசி நாள் என்று சொல்கின்றார்கள். கைசிக ஏகாதசிக்கு வேறு சிறப்பு என்ன என்று பார்க்க வேண்டும். கைசிகம் என்பது ஒரு ராகம். பண் என்று சொல்வார்கள். இந்தப் பண் கேட்பதற்கு மனதை மிக உருக்கக் கூடியதாக இருக்கும். கிட்டத்தட்ட இப்போதைய கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் இதை பைரவி ராகத்துக்கு இணையாகச் சொல்லுவார்கள். இந்த ஏகாதசிக்கும் இந்த ராகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.நம்பாடுவான் என்ற பெருமாள் பக்தர் திருநெல்வேலிக்கு அருகில் திருக்குறுங்குடி என்ற திவ்ய தேசத்தில் வாழ்ந்து வந்தார். பாணர் குலத்தைச் சேர்ந்தவர். ஆனால் ஏகாதசி விரதத்தை விடமாட்டார். இறைவனுக்கு முன்னால் நின்று கண்ணில் நீர் மல்க உருக்கமாகப் பாடி ஏகாதசி விரதத்தை முடிப்பார். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியில் ஒருமுறை கைசிகப் பண்பாடி, அந்தப் பண்ணினுடைய பலனை பிரம்மராட்சஸ் சாபம் பெற்ற ஒருவருக்கு அளித்து சாப விமோசனம் தந்தார். இது வராக புராணம் என்கின்ற புராணத்திலே சொல்லப்பட்ட கதை. இன்றைக்கும் கைசிக ஏகாதசி நாளன்று திருக்குறுங்குடியில் கைசிக புராண நாடகம் நடைபெறுகின்றது. இந்த கைசிக ஏகாதசிக்கு சக்தி அதிகம். 4.12.2024 இரவு திருக்குறுங்குடியில் கைசிக நாடகம் நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் அதனை கண்டு களிப்பார்கள். அடுத்த நாள் 5.12.2024 வியாழக்கிழமை துவாதசி பாரணை நடைபெறும்.
கார்த்திகை தீபம் – 13.12.2024 – வெள்ளி
இன்று கார்த்திகை தீபத்திருநாள். ஒவ்வொருவர் வீட்டிலும் வாசலில் ஏராளமான அகல் விளக்குகளை ஏற்றுவர். இறைவனை ஜோதி சொரூபமாக காணும் நாள் இந்த நாள். பல ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். வீட்டில் கார்த்திகை அவல்பொரி நிவேதனம் செய்து இறைவனுக்குப் படைப்பார்கள்.
கணம்புள்ள நாயனார் குருபூஜை -13.12.2024 – வெள்ளி
சிவத் தொண்டுகளிலே சீரிய தொண்டு எது என்று சொன்னால், சிவாலயங்களைத் தூய்மைப்படுத்துதல் அதாவது உழவாரப் பணி செய்தல் மற்றும் சிவாலயங்களில் திருவிளக்கு ஏற்றுதல். இவர் வேளூர் என்னும் ஊரிலே பிறந்து வேளாண்மை செய்து வந்தார். அந்த ஊர் குடிமக்களின் தலைவராகவும் விளங்கினார். இவர் தன்னுடைய செல்வங்களை எல்லாம் சிவாலயங்களில் திருவிளக்கிட்டு பராமரிப்பதில் செலவழித்து வந்தார். வினை வசத்தால் இவருக்கு வறுமை வந்தது. தம்முடைய ஊரை விட்டு தில்லை திருத்தலத்தை அடைந்தார். தன்னுடைய வீடு வாசல் நிலம் முதலியவற்றை விற்று திருவிளக்கு இடும் பணியைத் தொடர்ந்தார். செல்வங்கள் கரைந்து போயிற்று. அதனால் அவர் காட்டிற்கு சென்று புல்லை அறுத்து, அதனை விற்று அந்தப் பணத்தில் நெய் வாங்கி விளக்கிடும் பணியைத் தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் அதுவும் செய்ய இயலாமல் போகவே, அந்த புல்லையே திரியாகப் போட்டு விளக்கு எரிக்க, அது சற்று நேரம் எரிந்து அணையும் தறுவாயில் வேறு வழி இன்றி, தம்முடைய நீண்ட முடியை திருவிளக்காக ஏற்றினார். இவருடைய வைராக்கியத்தைக் கண்ட சிவபெருமான், மங்கலங்களைத் தந்து சிவ பதம் தந்தார்.
திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம் 13.12.2024 – வெள்ளி
ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் கடைசி ஆழ்வார் திருமங்கையாழ்வார். இவர் சீர்காழிக்கு பக்கத்தில் திருக்குறையலூர் என்னும் திருத்தலத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர். இவருக்கு நாலு கவிப் பெருமாள் என்கின்ற விருது உண்டு. ஆசுகவி, சித்திரக் கவி, வித்தாரக்கவி, மதுரகவி என்ற நால் வகைக் கவிகளும் பாடுவதிலும் வல்லவர். வைணவத்தின் 108 திருத்தலங்களில் வடநாடு ஆரம்பித்து தென்னாடு வரைக்கும் மிக அதிகமான திருத்தலங்களைச் சென்று சேவித்து தமிழ் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்தவர். திருமங்கை ஆழ்வார். பகவானிடம் இருந்து நேரடியாக பஞ்ச சம்ஸ்காரமும் (திருநறையூர் நம்பியிடம்) மந்திர உபதேசமும் (திருவாலி கல்யாண ரெங்கநாதரிடம்) பெற்றவர். நம்மாழ்வாரின் நான்கு வேத சாரமான பொருளை தனது ஆறு பிரபந்தங் களால் அருளிச் செய்தவர். இவர் அருளிய பிரபந்தங்கள் பெரிய திருமொழி, திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல் திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம். பல ஆலயங்களிலே இவர் திருப்பணிகள் செய்திருந்தாலும் திருவரங்கத்தில் வெகு காலம் தங்கி பற்பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். இவருடைய அவதார உற்சவம் எல்லா ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டாலும், சீர்காழிக்கு அருகிலே உள்ள திரு நகரியில் 10 நாட்கள் பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு தெற்கு நோக்கி தனிச்சந்நதியில் திருமங்கையாழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் காட்சி அளிக்கிறார். இவருக்கு தனிக் கொடி மரமும் இந்த ஆலயத்தில் உண்டு என்பது சிறப்பு. இவரது சிறப்பு பற்றிய பாசுரம் ஒன்று.
வாழி பரகாலன் வாழி கலிகன்றி வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரம்கொள் மங்கையர்-கோன்
தூயோன் சுடர் மான வேல்.
7.12.2024 – சனிக்கிழமை – ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள் அலங்கார திருமஞ்சனம்.
8.12.2024 – ஞாயிற்றுக்கிழமை – திருவல்லிக்கேணி குளத்துக் கரை ஆஞ்ச நேயர் திருமஞ்சனம்.
12.12.2024 – வியாழக்கிழமை – பரணி தீபம்.
12.12.2024 – வியாழக்கிழமை – திருப்போரூர் முருகன் பால் அபிஷகம்.
12.12.2024 – வியாழக்கிழமை – சுவாமிமலை முருகன் குதிரைவாஹனத்தில் பவனி.
13.12.2024 – வெள்ளிக்கிழமை -திருப்பரங்குன்றம் சுவாமிமலை தேர்.
13.12.2024 – வெள்ளிக்கிழமை – நம் பிள்ளை திருநட்சத்திரம்.
13.12.2024 – வெள்ளிக்கிழமை – திருக்கார்த்திகை பிரதோஷம்.
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.