×

இந்திரனின் நோய் தீர்த்த சுந்தரப் பெருமாள்

பரந்தாமனாகிய ஸ்ரீ மன் நாராயணர் இந்த பூமியில் புரிந்த லீலைகள் எண்ணிலடங்காதவை. அழகின் இலக்கணமாகத் திகழும் அந்த அழகர் பெருமாள் குடிகொண்டு அருளும் திருத்தலங்களும் இம்மண்ணில் எண்ணற்றவை.சுந்தரம் என்றால் அழகு என்பது பொருளாகும். சௌந்தரம் என்பதும் அழகையே குறிக்கும். அப்படி சுந்தரனாக, பெருமாள் வீற்றருளும் ஓர் அற்புத தலம் தான் சுந்தரப் பெருமாள் கோவில்.ஆதியில் இந்த திருத்தலம் சுந்தரவனம் என்றும் சமீவனம் (வன்னி மரக்காடு) என்றும் போற்றப்பட்டுள்ளது.பஞ்ச நதிகள் என்று போற்றப்படும் காவிரியாறு, அரசலாறு, குடமுருட்டியாறு, திருமலைராஜன் ஆறு மற்றும் முடிகொண்டான் ஆறு ஆகிய ஆறு நதிகளுக்கு நடுவே இங்கு ஸ்ரீ சௌந்தரவல்லித் தாயாருடன் எழுந்தருள் புரிகின்றார் ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள்.ஒரு சமயம் இந்திரனுக்கு சாபத்தால் வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. அதோடு, தனது இந்திர பதவியையும் இழந்தான். சாதாரண மானுடனாக மாறி, இப்பூவுலகை அடைந்தான். விமோசனம் வேண்டி அலைந்துத் திரிந்தான். பின் இச்சுந்தரவனத்தை அடைந்த இந்திரன் நாரதரின் தரிசனம் கிடைக்கப்பெற்றான். அவர் இந்திரனுக்கு……. ‘‘360 வெண்பூசணிக்காய்களை தினமும் ஒரு அந்தணர் வீதம் 360 அந்தணர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வெண்குஷ்ட நோய் நீங்கும் என்று ஆலோசனைக் கூறினார்.

அதன்படி வெண்பூசணிக்காயை தினமும் ஓர் அந்தணர் வீதம் கொடுத்து வந்தான் இந்திரன். ஒருநாள் அந்தணர் யாரும் கண்ணுக்கு தென்படவில்லை. பல இடங்களில் தேடியும் அந்தணர் ஒருவரும் அகப்படவில்லை. மிகவும் மனம் வருந்தினான் இந்திரன். எம்பெருமான் ஸ்ரீ மன் நாராயணரை வேண்டி நின்றான். மனமிறங்கிய மலையப்ப சுவாமி ஓர் ஏழை அந்தணராக இந்திரன் முன் வந்து நின்றார். மனம் மகிழ்ந்த இந்திரன், அவருக்கு வெண்பூசணியை தானம் செய்தான். என்னே ஆச்சரியம்? உடன் தனது வெண்குஷ்ட நோய் நீங்கப்பெற்று, பழைய நிலையை அடைந்தான் தேவேந்திரன்.திருமாலும் தனது அந்தண ரூபத்தை மாற்றிக்கொண்டு, பன்னீர் மரத்தடியில் சௌந்தரவல்லி தாயாருடன் சௌந்தரராஜ பெருமாளாக, சுந்தர ரூபத்தில் காட்சி அருளினார். மனம் மகிழ்ந்த மகேந்திரன், தாங்கள் இங்கு வீற்றிருந்து சேவை சாதித்தருள வேண்டும் என்று வேண்டினான். அப்போது சூரிய – சந்திரர்கள் சாமரம் வீசிட… முப்பது முக்கோடி தேவர்களுடன், ஸ்ரீ ருத்ரரும், பிரம்மாவும் உடனிருந்து இந்திரனுக்கு ஆசி வழங்கினர். இந்த ஆனந்த கோலாகலம் நடைபெற்றது இந்த சுந்தரவனம் என்னும் சுந்தரப் பெருமாள் கோவிலில்தான்.

ஊரின் உட்புறம் உயரிய மதில்கள் கொண்டு, ஏழு கலசங்களுடனான ஐந்து நிலை இராஜகோபுரம் கிழக்கு பார்த்தவாறு கம்பீரமாக காணப்படுகின்றது. உள்ளே… முதலில் ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வாராக கணபதி இராஜகோபுரத்தின் கீழே வடக்கு முகமாக காட்சி தருகின்றார். வெளிப்புறத்தில் நந்தவனம் அமைக்கப்பட்டு, மிகவும் ரம்மியமாக உள்ளது. தென்கிழக்கில் மடப்பள்ளியுள்ளது.நேராக பலிபீடமும், துளசிமாடமும் உள்ளன. பின் ஸ்ரீ கருடாழ்வார் கரம் குவித்தபடி வணங்கி நின்றுள்ளார். பின்னர் சிற்ப வேலைகளுடனான முகமண்டபம் காட்சியளிக்கின்றது. அடுத்ததாக இரண்டாம் வாயிலும், அதன் மேலே சிறிய மூன்று நிலை கோபுரமும் காணப்படுகின்றது. உள்ளே செல்ல…நான்கு கால் மண்டபம் அழகூட்டுகின்றது. இடது புறம் கொலு மண்டபம் காணப்படுகின்றது. வலப்புறம் ஸ்ரீ விஷ்வக்சேனர் என்னும் முதலியாண்டாரின் தனிச் சந்நதி உள்ளது. பக்கத்தில் ஸ்ரீ யோகநரசிம்மர், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ அனுமன் சந்நதிகள் உள்ளன. தொடர்ந்து ஆழ்வார்களின் தரிசனத்தையும் காண்கிறோம்.

நடு மத்தியில் மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகிய அமைப்பினில் பெருமாள் சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு ஸ்ரீ தேவி – பூதேவியர்களுடன் ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் அழகே வடிவாய் அருட்காட்சி அருள்கின்றார். மும்மூர்த்தி தலமாகத் திகழும் இப்பதியில் வடக்கு முகமாக பிரம்மாவும், தென்முகமாக ஸ்ரீ ருத்ரரும் அருள்பாலிக்கின்றனர். பெருமாளுக்கு பின்புறம் சூரியனும், சந்திரனும் சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர். தேஜோமயமாய், அதிரூப சுந்தரனாய்த் திகழும் இப்பெரமாளை முப்பத்து முக்கோடி தேவர்களும், 41,000 ரிஷிகளும் மலர்த்தூவி வணங்கி நிற்பதாக ஐதீகம் உள்ளது. சகல சௌபாக்கியங்களும் வழங்கும் மூர்த்தியாக இங்கு சேவை சாதித்துக் கொண்டிருக்கின்றார் திருமால். தினமும் சூரிய ஒளியானது பெருமாள் மீது படர்வது ஓர் தனிச்சிறப்பாகும்.பெருமாள் சந்நதிக்கு வலதுபுறம் ஸ்ரீ சௌந்தரவல்லித் தாயார் சன்னிதி கொண்டு அருள்பாலிக்கின்றாள். ஆண்டாள் சந்நதி இடதுபுறம் அமைந்துள்ளது. ஆண்டாள் சந்நதிக்கு வெளிப்புறம் தென்முகமாக சிறிய வடிவில், திருமாலிருஞ்சோலை என்னும் அழகர்கோவிலில் காட்சி தருவது போல் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் அருள்புரிகின்றார். இவரிடம் எவ்வித வேண்டுதல் வைத்தாலும் விரைவில் நடந்திடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இது உட்பிராகாரமாகும்.

அழகிய ஆலயம்: சோழர்களின் கலைப் பொக்கிஷமாக திகழ்கிறது. மாதாமாதம் வரும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சன சேவை நடைபெறுகின்றது. நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய வருடாந்திர விசேஷடங்கள் மட்டுமே இங்கு அனுசரிக்கப்படுகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம் தினமும் காலை 6 மணிமுதல் 10 மணிவரையும், மாலை 5 மணிமுதல் 7 மணிவரையும் திறந்திருக்கும்.குழந்தை இல்லா தம்பதிகள் தாயாருக்கு வளையல்கள் சாற்றி வழிபட, ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பல்வேறு நோய்களால் அவதிப்படுபவர்கள், பெருமாளுக்கும், தாயாருக்கும் அவர்களது நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் செய்து, வெண்பூசணிக்காயை தானம் வழங்கிட, தீராத நோய் தீர்ந்து போகும்.மிகப் பழமை வாய்ந்த இவ்வாலய திருப்பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அன்பர்கள் இதில் கலந்துகொண்டு, பெருவாரியான திருப்பணிகளை செய்து மேன்மையுற வேண்டுகின்றோம்.

அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலம் பாபநாசத்திற்கு அருகே 2 கிலோ மீட்டர் தொலைவில்
அமைந்துள்ளது.

மோ.கணேஷ்

The post இந்திரனின் நோய் தீர்த்த சுந்தரப் பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Sundarab Perumal ,Indra ,Sri Man-Narayana ,Bharandamana ,earth ,Sundaram ,Sundar ,
× RELATED ஐயப்பன் அறிவோம் 30: புலி மீது உலா