புதுடெல்லி: ராகுல்காந்தியை துரோகி என்று திட்டிய விவகாரத்தில் பா.ஜ எம்பி சம்பித் பத்ராவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளார். அமெரிக்காவில் அதானி மீது வழக்கு தொடரப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் கையில் எடுத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்த நிலையில் பா.ஜ எம்பி சம்பித் பத்ரா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை உயர்ந்த பதவியில் இருக்கும் துரோகி என்று விமர்சனம் செய்தார். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் பா.ஜ எம்பி சம்பித் பத்ராவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் சிறப்பு உரிமை மீறல் தீர்மானத்தை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் வழங்கி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, மக்களவை எம்.பி.,யான சம்பித் பத்ரா, முற்றிலும் அவதூறாக நடந்து கொண்டதால் சிறப்புரிமை தீர்மானம் அடிப்படையில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரை துரோகி என்று சம்பித் பத்ரா குறிப்பிட்டார். மேலும் எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
எதிர்கட்சித்தலைவருக்கு எதிராக இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது, பொது வாழ்வில் அவதூறு செய்வது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த செயல் நாடாளுமன்ற சிறப்புரிமையை முற்றிலும் மீறுவதாகும். ஏனெனில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது அரசியல் சாசனப் பதவி. எனவே அத்தகைய பதவிக்கு உரிய நாடாளுமன்றக் கண்ணியம் வழங்கப்பட வேண்டும். பத்ரா, முற்றிலும் அவதூறான மற்றும் நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு விதிமுறைகளை தெளிவாக மீறியுள்ளார்.
நாட்டிற்காக பல தியாகங்களைச் செய்த குடும்பத்தில் இருந்து வந்த தலைவரை ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, அவமானகரமானது. எனவே எனது இந்த உரிமை மீறல் நோட்டீசின் மீது உரிய மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
‘நாட்டை விட மேலானது ராகுலுக்கு எதுவும் இல்லை’
காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தி கூறுகையில்,’ சுதந்திரப் போராட்டத்தில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேருவை துரோகி என்றும், பாகிஸ்தானை இரண்டாக உடைத்து வங்கதேசத்தை உருவாக்கிய இந்திரா காந்தியை துரோகி என்றும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராஜீவ் காந்தியை துரோகி என்றும் சொன்னவர்கள்தான் இன்று ராகுல் காந்தியையும் துரோகி என்று சொல்கிறார்கள் என்றால், அதில் புதிதாக எதுவும் இல்லை. இருப்பினும் எனது சகோதரனைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
இந்த நாட்டை விட மேலானது எதுவும் என் சகோதரனுக்கு இல்லை. இந்த நாட்டின் ஒற்றுமைக்காக எனது சகோதரர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிலோமீட்டர் தூரம் நடந்தார். ஆனால் அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பா.ஜவுக்கு தைரியம் இல்லை. விவாதம் நடத்துவதில் என்ன பிரச்னை? ஜனநாயகத்தில் தானே விவாதம் நடக்கும். அதனால் தான் அவர்கள் பயப்படுகிறார்கள்’ என்றார்.
The post ராகுலை ‘துரோகி’ என்று திட்டிய விவகாரம்; பாஜ எம்பிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.