×

இடப்பாகத்தில் சிறந்தவளே!

``பரம்‌ என்றுனை அடைந்தேன்‌ தமியேனும்‌ உன்‌ பத்தருக்குள்‌
தரம்‌ அன்று இவன்‌ என்று தள்ளத்‌ தகாது தரியலர்தம்‌
புரம்‌ அன்று எரியப்‌ பொருப்புவில்‌ வாங்கிய, போதில்‌ அயன்‌
சிரம்‌ ஒன்று செற்றகை யான்‌ இடப்பாகம்‌ சிறந்தவளே!’’
– எண்பத்தி எட்டாவது அந்தாதி

ஆதியாக

இப்பாடலானது சரணாகதி தத்துவத்தை விளக்குகிறது. தத்துவத்திற்குரிய இலக்கணமானது, அறிவது, செயல்படுத்துவது, செம்மைபடுத்துவது, அனுபவிப்பது என்ற நான்கு நிலையில் உள்ளது. அந்த நான்கு நிலைகளை சார்ந்து மனிதர்கள் மாறுபடாமல் பின்பற்றி சரணாகதி தத்துவத்தின் பயனை அடைய சில விதிமுறைகளை சொல்கிறார். அதில் அர்தநாரீஸ்வரர், த்ரிபுராந்தகன், பைரவர் என்ற மூன்று தேவதைகளை வழிபாடு செய்து உண்மையை பின்பற்றுவதில் தடங்கள் உள்ளதை நிவர்த்தி செய்ய அந்தந்த தேவதையின் பெயரை குறிப்பிடுகிறார்.

இதனால் சாஸ்திரங்களை பின்பற்றுவதற்கு நல்ல குரு அமைய வேண்டும். அவரின் அன்பினை சீடன் பெறவேண்டும். அவருடைய ஆற்றலை முழுமையாக அறிய வேண்டும். அப்படி அறிந்தால்தான் அவர் மீது மதிப்பு தோன்றும், மதித்தால்தான் அவர் சொன்ன வார்த்தையை பின்பற்ற தோன்றும். பின் பற்றி நடந்தால் தான் அதில் உள்ள கஷ்ட, நஷ்டம் தெரியும். அது விளங்கினால்தான் அந்த வழியில் முன்னேற முடியும்.

அதற்கு பொறுமையும், கவனமும் மிகவும் தேவை என்றாலும் உபாசனையானது உள்ளத் தூய்மை உள்ளோர்க்கு உடனடியாக பலனை தரக்கூடியது. அது இல்லாதபோது பலனில் காலதாமதம் மற்றும் தடை ஏற்படும். பெரிய தேவதையின் உதவியால் வரத்தை பெற முயலவேண்டும். இந்த அனைத்து கருத்துகளுமே நம்பிக்கை சார்ந்து அமைவதால் நம்பிக்கை, வழுவாமை, உறுதி வேண்டும். நல்ல படியாக உபாசனை வழியில் சென்றாலும்கூட ஆணவத்தினாலோ ஆசையினாலோ அறியாமையினாலோ தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதையே இப்பாடல் பதிவு செய்கிறது. இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

* பரம் என்று உனை அடைந்தேன்
* தமியேனும் உன் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது
* தரியலர் தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய
* போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான்
* இடப் பாகம் சிறந்தவளே

இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கதை இனி காண்போம்.

“பரம் என்று உனை அடைந்தேன்’’

என்பதனால் உமையம்மையின் ஒப்பற்ற இயல்பான உயர்வை வேதம் ஆகமங்களின் வழி அறிந்து “பரம்’’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டு, அதனால் உன்னிடத்தில் வரம் பெற வந்தேன், உலகியல் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அதை உன் அருளால் பெறலாம் என்று நான் எதை உயர்வாக நினைக்கிறேனோ, அதை பெற வந்தேன் என்றும், உலகப் பொருள் எதையும் விரும்பாமல் உன்னையே, உன் அருளையே உயர்வாக என் உள்ளத்தில் கருதி உன் அருளை நாடி வந்தேன் என்ற மூன்று பொருள்பட அறிவு, ஆசை, அன்பு இவற்றை உணர்த்தவே “பரம் என்று உனை அடைந்தேன்” என்கிறார்.

“தமியேனும் உன் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது’’

“தமியேன்’’ என்ற வார்த்தை அபிராமி அம்மையின் அருளை பெற எண்ணி முயற்சி செய்பவர்களுள்தான் முதன்மையாக இருப்பதாக பட்டர் தன் உள்ள உணர்வை குறிப்பிடுகிறார். “உன் பக்தருக்குள்’’ என்பதனால் அபிராமி பட்டருக்கு முன் உமையம்மையின் அருளை பெற்றவர்களை குறிப்பிடுகிறார். `மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி’ (4) “தரம் அன்று இவன் என்று’’ என்பதனால் உமையம்மையை தனக்கு முன் வழிபட்ட காரி, நாயனார், கலய நாயனார், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், தேவேந்திரன் போன்றவர்களை தன்னோடு ஒப்பிட்டு பார்த்து அவர்களை நோக்கதான் எந்த விதத்திலும் சிறந்தவனல்ல என்பதையும் தானே உணர்ந்து “தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது’’ என்று உமையம்மையிடம் தன் ஆன்மிக வளர்ச்சியை குறிப்பிடுகிறார்.

அந்த ஆன்மிக வளர்ச்சியானது தள்ளத் தக்கதாகவே இருக்கும் என்று தன் இறை உணர்வை தாழ்த்தி குறிப்பிடுகின்றார். அப்படி தாழ்ந்து போனதும் உன் கருணை மேல் நோக்கி உயர்த்தும். மேலும், தகுதியின்றி உயர்வானதை ஆசைப்படுகிறேன் என்று தானே வெளிப்படுத்துகிறார். இதையெல்லாம் மனதில் கொண்டே “தமியேனும் உன் பக்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது’’ என்கிறார்.

“தரியலர் தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய’’

ஒருவரின் பெயரை நாம் வேறு ஒருவரிடத்து பரிந்துரை செய்கிறோம் என்றால் அந்த நபரை பற்றிய நம் எண்ணத்தையே அவரின் பண்பாக பதிவு செய்வோம். அதுபோலவே அபிராமி பட்டர் “தரியலர் தம் புரம்’’ என்ற த்ரிபுராந்தக மூர்த்தியை பதிவு செய்கிறார். இந்த மூர்த்தியை பற்றி பூசனையினால் உயர்ந்தவர்கள் அசுரர்கள் என்றிருக்க தேவர்களை காக்க சிவபூசனையை மழுங்க செய்ய மகாவிஷ்ணுவே தவறான உபதேசத்தை செய்து தெய்வ நம்பிக்கையை குறைத்து சிவபூசனையில் அலட்சியத்தை ஏற்படுத்தி அதன் பிறகே அந்த அசுரர்களை அழித்தார்.

அந்தப் பண்பை மனதில் கொண்டு சிவபூசனையை எக்காரணம் கொண்டும் அலட்சியம் செய்யக்கூடாது என்ற சிரத்தையை ஏற்படுத்தவே இதை கூறுகின்றார். போலியான குருமார்கள் இறை மீது அவநம்பிக்கையை தோற்றுவிப்பவரை பதிவுசெய்கிறார். அசுரர்கள் செய்த பூஜை, ஜபம் முதலியவற்றால் காவலாளியாகவும், குடமுழா வாசிப்பவனாகவும், அசுரர் மாறினர் என்ற உபாசனை பற்றிய மூன்று கருத்துக்களை பதிவு செய்யவே அது சூட்டும் தலபுராண செய்தியை “தரியலர் தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய’’ என்கிறார் தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி திரிபுராந்தக மூர்த்திக்கு ஒரு தேரை உருவாக்கினார்கள்.அதில் பிரம்மா தேர் ஓட்டுபவனாகவும், ஆதிஷேஷன் நாணாகவும், மேருமலை வில்லாகவும், நான்கு வேதமே குதிரைகளாகவும் இருக்கும் படி ரதத்தை அமைத்தார்கள். தங்களின் முயற்சியால்தான் சிவபெருமான் வெற்றி பெற்றுவார் என்று எண்ணினர். ஆனால் சிவபெருமான் கால் வைத்த உடனேயே அந்த தேரின் அச்சாணி முறிந்தது. தேவர்கள் அனைவரும் நாணி தலை குனிந்தனர். இத்தகைய ஆணவ மனப்பான்மை உபாசகன் பெறக்கூடாது என அறிவுறுத்தவே “தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய’’ என்கிறார்.

“போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான்’’

என்பதனால் நான்கு வேதங்களை படைத்தவனாயினும், அறத்தின் வழியே நடப்பவனாயினும் நான் என்ற ஆணவம் உபாசகனுக்கு இருக்கக்கூடாது என்று ஆணவத்தினால் பேசிய பிரம்மனின் ஒரு தலையை சிதைத்தார் என்ற வரலாற்று தகவல் குறிப்பினால் நமக்கு உணர்த்துகிறார். மேலும், சிவமகா புராணம் விளக்கும் வரிகளை காண்போம். விஷ்ணு மூர்த்திக்கு வரங்களைக் கொடுத்த சிவபெருமான் பொய் பேசிய பிரம்மன் விஷயத்தில் கடுங்கோபம் கொண்டு அவரை அடக்க வேண்டும் என்று கருதி, தம் இரு புருவங்களுக்கு இடையே பைரவரைத் தோன்றச் செய்தார்.அப்போது பைரவர் சிவபெருமானை வணங்கி `ஸ்வாமி! அடியேன் செய்யத்தக்க பணிவிடையாது?’ என்று கேட்டார். அவரை சிவபெருமான் நோக்கி பைரவா இந்தப் பிரம்மன் என்னுடைய ஜோதி ரூபத்தின் முடிவைக் கண்டேன் என்று பொய் பேசினான். ஆகையால் அவனுடைய சிரத்தை உன் கையிலுள்ள கட்கத்தால் அறுத்து எறிந்துவிட வேண்டும் என்று கூறினார்.

உடனே பைரவர் விஷ்ணு புத்திரராகிய பிரம்மதேவனின் தலைமயிரை ஒரு கையால் பற்றி பொய் பேசிய அவரது ஐந்தாவது தலையை அறுத்து மற்ற தலைகளையும் அறுக்க ஆரம்பித்தார். பிறகு பிரம்மன் அணிமணிகள் ஆடைகள் மாலைகள் முதலியவற்றை விட்டு அவிழ்ந்த தலைமயிரோடு பெருங்காற்றால், அலை புரண்ட வாழை மரம் போல நடுநடுங்கி பைரவ மூர்த்தியின் பாதங்களில் விழுந்து வணங்கினார். அதைக் கண்ட விஷ்ணு மூர்த்தி தம்புத்திரனான பிரம்மன் விஷயத்தில் மனங்கசிந்து அவருக்குச் சிவபெருமானின் திருவருளை உண்டாக்கச் செய்ய விரும்பி சிவபெருமானை வணங்கி, குழந்தை தன் தந்தையிடம் பேசுவது போல `சகல லோகங்களுக்கும் பதியான சங்கர பகவானே! இந்தப் பிரம்மனுக்கு அவன் செய்த பெருந்தவத்திற்கு இரங்கி முன்பு ஐந்து முகங்களை அடையாளமாக தந்தருளினீர்.

ஆகையால் அவனை மற்றச் சிரங்களை அறுக்காமல் மன்னித்தருள வேண்டும் என்று பணிவோடு விண்ணப்பம் செய்து கொண்டார். அதனால் சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து சகல தேவர்களுக்கும் முன்பாக பைரவரை அழைத்து அவருக்கு ஒருலகு கொடுத்து அனுப்பிவிட்டு, நான்கு சிரங்களுடன் இருக்கும் பிரம்ம தேவனை பார்த்து’ `நீ மந்த புத்தியால் என் ஸ்வரூபத்தை அறிய விரும்பினாய்! உன்னால் அது முடியாதபோது பொய் சொன்னாய். இக்குற்றங்களால் உனக்கு உலகத்திலே பூஜையும் உற்சவம் முதலியனவும் இல்லாமற் போகுக!’ என்றார்.

அவ்வார்த்தையைக் கேட்ட பிரம்மன் சிவபெருமானே! தயை செய்ய வேண்டும். எனது ஐந்தாவது சிரமே பொய் பேசியது, ஆகையால் அதை எடுத்தது எனக்கு திருப்தியே! பரிசுத்தமானவரே! சகலருக்கும் பந்துவே! கைலாசபதியே நமஸ்காரம் என்று பணிந்தார். அவரே சிவபெருமானை நோக்கி, பிரம்மனே! உலகிற்கு அரசன் இல்லாவிட்டாலும் நாசம் உண்டாகும் ஆகையால் நீ உலகங்களிலுள்ள வேதியருக்கெல்லாம் அரசனாக இருக்க! அக்னி ஹோத்ரம் முதலியவற்றிற்கும் நீயே குரு உன்னையல்லாது யாகம் முதலியவற்றைச் செய்தாலும் அதன் பயன் ஒருவனுக்கு உண்டாகாது என்று கூறினார்.பிறகு பொய் சாட்சி சொன்ன தாழை மலரை அவர் கோபத்துடன் பார்த்து “ஜட புத்தியும் துஷ்டத்தனமுடைய நீ இங்கிருந்து தொலைவில் செல் எனக்கு உன்னிடத்தில் சிறிதும் விருப்பமே கிடையாது, இனி நீ என் பூஜைக்கு உதவ மாட்டாய்!’ என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்கள் அன்று முதல் உலகத்தில் ஒரு நாளும் தாழை மலரை சிவபூஜைக்கு பயன்படுத்துவதில்லை‌.

தாழம்பூ, சிவபெருமானைப் பணிந்து; `சுவாமி! என்னை தங்களின் பூஜையில் உபயோகிகப்படுத்தா விட்டால், என் பிறவி பயனற்றுப் போகுமே! நான் செய்த பாவங்களை மன்னித்து என் பிறவியைப் பயன்படுத்தியதாகச் செய்ய வேண்டும். உம்மை மனத்தாலே தியானம் செய்தாலும், சகல பாவங்களும் ஒழிந்துவிடுமே! உம்மை தரிசித்து உம்மோடு நெடுங்காலம் இருந்து அடியேன் பொய் பேசிய பாவமும் மன்னிக்கப்பட வேண்டும்’ என்று பலவாறு வேண்ட, சிவபெருமான் சிறிது திருவுளம் இரங்கி, `தாழை மலரை! என் பக்தர்கள் உன்னை அணிந்து கொள்வர். அதனால் ஜென்ம சாபல்யம் அடைக!’ என்று தாழை மலருக்கு அருள்புரிந்து பிரம்மன் விஷ்ணு சகல தேவர்களாலும் துதிசெய்யப் பெற்றுத் தேவர்களுக்கிடையே எழுந்தருளியிருந்தார். இந்த புராணத்தின் மூலம் பொய், ஆணவம் இவை வழிபாட்டிற்கு தடைகள், மெய் சரணாகதி இவை வழிபாட்டிற்கு உதவி புரியும் என்று தெளிவாக விளக்குகிறார் பட்டர். இதையே “போதில் அயன் சிரம் ஒன்று செற்ற கையான்’’ என்கிறார்.

“இடப் பாகம் சிறந்தவளே’’

என்பதனால் உமையம்மை தன் தவத்தினால் சிவபெருமானிடம் இடப்பாகத்தை பெற்றாள். அத்தகைய அர்த்தநாரீஸ்வர வடிவத்தை வணங்குவதனால் உபாசகனிடம் கலந்து விடுவாள் என்று குறிப்பிடுகின்றார். மேலும், இம்மூன்று வரிகளாலேயே ஸ்ரீ சக்கரத்தின் வழிபாட்டின் அதிதேவதையாகவும், பிரதி தேவதையாகவும், உபதேவதையாகவும், இருப்பவர் அர்த்தநாரி, திரிபுராந்தகர், பைரவர். ஸ்ரீ சக்கரத்தில் அர்த்தநாரியாக உமையம்மையை வழிபாடு செய்தால் ஞானத்தையும், காமக்யாவில் இருக்கும் ஆனந்த பைரவரை ரூபமாக வழிபாடு செய்தால் உலகியல் இன்பங்களை அருள்வாள். திரிபுராந்தகர் வழிபாடு என்பது சாக்த சித்தாந்தத்திலே மிகச் சிறப்பாக கூறும் கூடுவிட்டு கூடுபாயும் பண்பினால் ஆன்மா விடுதலை அதாவது மோட்சம் சித்திக்கும்.

இந்த மூன்று தேவதைகளை முறையாக ஸ்ரீ சக்கரத்தில் பிந்துவிலும், சிவசக்தி கோணங்களிலும், பூ புரம் என்ற பகுதியிலும் வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது. உமையம்மையானவள் சிவபெருமானுடன் ஒன்றாய் பிந்துவிலும், உடனாய் சிவசக்தி கோணத்திலும், வேராய் பூ புரத்திலும் எண்ணி வழிபடுகிறார்கள். இந்த மூன்று தேவதைகளுக்கும் வெவ்வேறு சோடசாக்ஷரி மந்திரங்கள் உள்ளன என்பதை சாக்த தந்திரங்கள் அறிவிக்கிறது. சாக்த உபாசகர்கள் விரும்பிய பலனை பெறுவதற்கு காம்ய பூஜையையும், மோட்சத்தை பெறுவதற்கு நித்ய பூஜையையும், ஞானத்தைப் பெறுவதற்கு நைமித்ய பூஜையையும் பின்பற்ற வேண்டும் என்பதையே இந்தப் பாடல் மூலமாக நமக்கு மறைமுகமாக அறிவுறுத்துகிறார். இந்த மும்மூர்த்திகளுமே ஸ்ரீ வித்யாவின் இச்சா, ஞான, கிரியா தேவதைகள் என வழங்கப்படுகின்றன. இதையே “இடப்பாகம் சிறந்தவளே” என்கிறார்.

அந்தமாக

“பரம் என்று உனை அடைந்தேன்’’ என்பதனால் ஸ்ரீ வித்யா உபாசனையில் சரணாகதி தத்துவத்தையும், “தமியேனும் உன் பக்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது’’ என்பதனால் உபாசனின் ஆன்மிக வளர்ச்சியை அளவிடும் முறை பற்றி பேசுகிறார், “தரியலர்தம் புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய’’ என்று ஸ்ரீ வித்யா உபாசனையில் அதி தேவதையையும், “போதில் அயன் சிரம் ஒன்று செற்றகையான்’’ என்பதனால் பிரத்தியதி தேவதைகளையும், “இடப்பாகம் சிறந்தவளே’’ என்பதனால் உபதேவதைகளையும் குறிப்பிடுகிறார்.இந்த மூன்று தேவதைகளையும் உபாசகன் உபாசனையில் செய்யும் தவறுகளை சரி செய்வதற்கும், உபாசனையில் நன்கு வளர்வதற்கும், நினைத்ததை நினைத்தபடி அடைவதற்கும், பிறருக்கு உபாசனை தேவதையை உணர்த்துவதற்கும், தந்திர சாஸ்திரங்களை முறையாக குறிப்பிட்டுள்ளார். அதையே அபிராமி பட்டர் பாடலின் வழி நமக்கு அறிவுறுத்தியதோடு, தானும் அவ்வருள் பெற்று அமாவாசையை பௌர்ணமி ஆக்கியதை இந்த பாடலில் சூட்டுகிறார். இந்த உபாசனையின் வழி வெற்றி அடைய முயல்வோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post இடப்பாகத்தில் சிறந்தவளே! appeared first on Dinakaran.

Tags : Baram ,Eriab ,Dariyāram ,earth ,
× RELATED கோவை கால்நடை மருத்துவமனையில் அறுவை...