×

ஈரோடு ரயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு, டிச. 5: ஈரோட்டில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை அதிகளவில் ரயில்கள் மூலமாக கடத்தப்படுவது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில்வே போலீசார் ஆகியோர் இணைந்து நேற்று முன்தினம் ரோந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், அசாம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், ஈரோடு மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ கார்த்திகேயன் தலைமையில் போலீசார் ரயிலின் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர்.

அப்போது, பொதுப்பெட்டியில் 2 பேக் கேட்பாரற்று கிடந்தது. அந்த பேக்கினை பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பேக்குகளை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பேக்கையும், அதில் இருந்த 8 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்து, ரயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஈரோடு ரயிலில் கடத்திய 8 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் மது போதையில் ஓட்டி வரப்பட்ட...