×

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ38 லட்சத்தில் உட்கட்டமைப்பு வசதி: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு தொடங்கி வைத்தனர்


சென்னை: தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினசரி சுமார் 1500 பேர் பல் சிகிச்சைக்காக பல் மருத்துவமனைக்கு வருகிறார்கள். புறநோயாளிகள் பகுதி தரை மட்டத்திலிருந்து மிகவும் உயரத்தில் உள்ளது.  வயதான பயனாளிகள் மற்றும் இணை நோய்கள் உள்ளோர்கள் பல்வேறு துறைகளுக்குச் செல்ல ஏதுவாக சிஎஸ்ஆர் நிதியின்கீழ் ரூ5 லட்சம் செலவில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் பயணிகள் வாகனத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். பிறகு ரூ11 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (ஆர்ஓ) கருவிக்கான பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்தது. ரூ19.28 லட்சம் செலவில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஸ்மார்ட் போர்டு ரூ2.50 லட்சம் செலவில் 75 அங்குலம் அளவிலான 2 ஸ்மார்ட் போர்டுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் ரூ64.09 கோடியில் 1,34,764 சதுரடி பரப்பளவில் 3 முதல் 6 தளங்களில், செயற்கை பல் கட்டும் துறை, ஈறு நோய் சிகிச்சை துறை, பல் சீரமைப்பு துறை, குழந்தைகள் பல் மருத்துவத் துறை, வாய்நோய்குறியியல் துறை, சமுதாய பல் பாதுகாப்பு துறை, ஆய்வகம், தேர்வு கூடம், கருத்தரங்கு கூடம் போன்ற வசதிகளுடன் கட்டிடப்பணிகள் நடந்து வருகிறது.

ரூ64.90 கோடியில் 1,50,136 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 13 தளங்களுடன் பார்வையாளர்கள் அறை, மருத்துவ அறை, சமையலறை, படிக்கும் அறை, பொழுது போக்கு அறை, உடற்பயிற்சி கூடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய 274 தங்கும் அறைகள் கொண்ட முதுகலை மற்றும் இளநிலை பல் மருத்துவ மாணவியர்களுக்கான தங்கும் விடுதி கட்டிடப்பணிகளும் நடந்து வருகிறது. இப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

The post தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ38 லட்சத்தில் உட்கட்டமைப்பு வசதி: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Dental College Hospital ,Ministers ,M. Subramanian ,Shekharbabu ,Chennai ,Tamil Nadu Dental College Hospital ,Sekarbabu ,
× RELATED வடகிழக்கு பருவமழை முடியும் வரை...