×

விழுப்புரம் மாவட்டத்தில் 900 வெளிமாவட்ட பணியாளர்கள் மின் பாதிப்புகளை சீர்செய்து வருகின்றனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

செஞ்சி, டிச. 4. விழுப்புரம் மாவட்டத்தில் 900 வெளி மாவட்ட பணியாளர்கள் மின்பாதிப்புகளை சீர் செய்து வருகின்றனர் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழையால் ஏராளமான நெற்பயிர்கள், மின் கம்பங்கள் சேதமடைந்தும், வீடுகளில் தண்ணீர் புகுந்தும் பாதிக்கப்பட்டுள்ளன. செஞ்சி பகுதியில் பாதிக்கப்பட்ட மின் கம்பங்கள் சீர்செய்யும் பணியை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது செஞ்சி சாவடி பகுதியில் மின்கம்பம் சீர்செய்யும் மின்வாரிய ஊழியரிடம் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு மேலும் துரிதப்படுத்த பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் செஞ்சி புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி அருகில் சேதமடைந்த கம்பங்களை சீர்செய்யும் பணியை பார்வையிட்டார்.

தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இயல்பான நிலைக்கு வர அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 7 லட்சத்து 56 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இவற்றை சீர்செய்ய 900 களப்பணியாளர்கள் 2 நாட்களாக பணி செய்து வருகின்றனர். 24 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்காமல் உள்ளது. இவைகளுக்கு இன்று (நேற்று) அல்லது நாளை (இன்று) சீராக மின்சாரம் வழங்கப்படும். நாமக்கல், சேலம், ஈரோடு, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 900 மின்சார ஊழியர்கள் 2 நாட்களாக பணியாற்றி வருகின்றனர். 24 ஆயிரம் வீடுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மின்சாரம் மழைநீர் வடிந்தால் உடனடியாக இன்று அல்லது நாளை மின்விநியோகம் செய்யப்படும்.

3 ஆண்டுகளில் 399 துணை மின் நிலையங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 50 இடங்களுக்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் விரைவில் மதிப்பீடு செய்து நிறைவு பெறும். பணியாளர்கள், ஏற்கனவே உள்ளவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். பணியாளர்கள் தேவைப்பட்டால் கூடுதலாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும் நிதித்துறை கவனத்துக்கு கொண்டு சென்று பணியாளர்கள் நியமனம் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது செஞ்சி எம்எல்ஏ மஸ்தான், தஞ்சாவூர் மேற்பார்வை செயற்பொறியாளர் நளினி, தலைமை செயற்பொறியாளர் கிருஷ்ணவேணி, விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் நந்தகுமார், செஞ்சி உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரி, தலைமை மேலாண் இயக்குனர் நாகராஜ் குமார் மற்றும் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் மற்றும் மின்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் 900 வெளிமாவட்ட பணியாளர்கள் மின் பாதிப்புகளை சீர்செய்து வருகின்றனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Minister ,Senthil Balaji ,Senji ,Senthilbalaji ,Benjal storm ,
× RELATED ஜாமீன் உத்தரவு மறுஆய்வு அமைச்சர்...