×

திருவண்ணாமலையில் மண் சரிவில் புதையுண்ட வீட்டிலிருந்த 7 பேரின் சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில், மீட்புப் பணி நிறைவு!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபமலைப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 5 பேரின் சடலங்கள் நேற்றிரவு மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 2 சடலங்களை மீட்கும் பணி 3வது நாளாக நடந்தது. அதில் 2 சடலமும் இன்று மீட்கப்பட்டது. சம்பவ நடந்த பகுதியில் ஐஐடி வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்து மண் மாதிரிகளை சேகரித்தனர்.திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் தீபம் ஏற்றும் மலையில் நேற்று முன்தினம் மாலை மண் சரிவு ஏற்பட்டது. மலையடிவாரத்தில் உள்ள வஉசி நகரில் 2 வீடுகள் முற்றிலுமாக சிக்கிக்கொண்டது. அதில், ஒரு வீட்டுக்குள் இருந்தவர்கள் ஏற்கனவே வெளியேறி விட்டனர். ஆனால், மற்றொரு வீடு கண்ணிமைக்கும் நேரத்தில் மண் சரிவில் சிக்கியது. அதோடு பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன.

அந்த வீட்டுக்குள் இருந்த கூலித்தொழிலாளி ராஜ்குமார்(32) அவரது மனைவி மீனா(26), மகன் கவுதம்(9), மகள் மீனா(7), உறவினர் சுரேஷ் மகள் மகா(12), சரவணன் மகள் ரம்யா(12), மஞ்சுநாதன் மகள் வினோதினி(14) ஆகிய 7 பேரும் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 30 பேர், மாநில பேரிடர் குழுவை சேர்ந்த 50 பேர் மற்றும் தீயணைப்பு துறையினர் உட்பட 170 பேர் கொண்ட மீட்பு படையினர் களமிறங்கினர். குறுகலான மற்றும் மலைப்பகுதியில், பொக்லைன், ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வர முடியாததால், மண் சரிவை அகற்றுவதில் சிக்கலும் தாமதமும் ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று சிறிய ஜேசிபி இயந்திரத்தை குறுகலான பாதையின் வழியே படிப்படியாக கொண்டு சென்று மீட்பு பணி நடந்தது.

தொடர்ந்து 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று மாலை 5.45 மணியளவில் ராஜ்குமாரின் மகன் கவுதம் சடலமாக மீட்கப்பட்டான். இதையடுத்து ஒரு சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 2 சடலங்கள் மண்ணின் ஆழத்தில் சிக்கியிருந்ததால் வெளியே எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மீட்கப்பட்ட 5 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் 3வது நாளாக இன்று காலை மீட்பு குழுவினர் 2 சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு மண்ணில் புதைந்து கிடக்கும் 2 பேரின் சடலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் 2 சடலமும் மீட்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று தீபமலையில் அடுத்தடுத்து 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் மண் சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவு குறித்து ஐஐடி வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நேற்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது அறிவித்தனர்.

The post திருவண்ணாமலையில் மண் சரிவில் புதையுண்ட வீட்டிலிருந்த 7 பேரின் சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில், மீட்புப் பணி நிறைவு!! appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai Deepamalai ,
× RELATED நினைத்தாலே முக்தி தருபவர் அண்ணாமலையார் #Tiruvannamalai #annamalaiyartemple