×

விழுப்புரம் மாவட்டம்; மின் கம்பங்களை விரைந்து சீரமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடி ஆய்வு!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரான மின் விநியோகம் வழங்கிட, மின் கம்பங்களை விரைந்து சீரமைக்கும் பணிகளை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடி ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மின்சாரம். மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (03.12.2024) காலை 6.30 மணியளவில் மேற்பார்வை பொறியாளர்/விழுப்புரம் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் ஃபென்சால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் கம்பங்களை சரிசெய்து சீரான மின் விநியோகம் விரைவாக வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.க.நந்தகோபால், இ.ஆ.ப., இயக்குநர்/பகிர்மானம் திரு.மாஸ்கர்னஸ், தலைமைப் பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்பு விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்சால் புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட விழுப்புரம் தும்பூர், செஞ்சி சிறுகடம்பூர் சாவடி தெரு, சிறுகடம்பூர் புனித மிக்செல்பள்ளி, திண்டிவனம் கிடங்கல், மரக்காணம், ஆரோவ், திருச்சிற்றம்பலம் ஆகிய இடங்களில் ஃபென்சால் புயல் காற்றினால் சேதமடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகளை சீர்செய்யும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடித்து பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இரவு பகலாக சிறப்பாக பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் மின் களப்பணியாளர்களை சந்தித்து வெகுவாக பாராட்டினார்.

அமைச்சர் கூறும் போது ஃபென்சால் புயலால் பாதிப்பு அடையாத பிற மாவட்டங்களில் இருந்து 900 மின் களப்பணியாளர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு மட்டும் வரவழைத்து போர்க்கால அடிப்படையில் மின்கம்பங்கள், மின்கம்பிகள் மற்றும் மின்மாற்றிகளை சரிசெய்து சீரான மின்சாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 7,56,000 மின் இணைப்புகள் உள்ளன. அதில் 24,000 வீடுகளுக்கு மழையின் காரணமாக மின் இணைப்பு நிறுத்தப்பட்டது. இன்று இரவுக்குள் மழை நீர் வடிய வடிய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

The post விழுப்புரம் மாவட்டம்; மின் கம்பங்களை விரைந்து சீரமைக்கும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடி ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Villupuram District ,Minister ,Senthil Balaji ,Villupuram ,Electricity ,Cyclone Fenchal ,Tamil Nadu ,Chief Minister… ,
× RELATED விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் மின்விநியோகம் சீரானது..!!