×
Saravana Stores

சென்னை விமானநிலையத்தில் மழையில் நனைந்தபடி இறங்கிய விமானப் பயணிகள்: அதிகாரிகள் மீது புகார்

மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் மழை பெய்தது. அச்சமயத்தில் சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் நேற்றிரவு 11.45 மணியளவில் கோவையில் இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்க வேண்டும். எனினும், அந்த விமானம் முன்னதாகவே இரவு 11.36 மணியளவில் சென்னைக்கு வந்து தரையிறங்கியது. அச்சமயத்தில் சென்னை விமான நிலையப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த விமானத்துக்கு ஏரோபிரிட்ஜ் ஒதுக்கீடு செய்யாமல், ஓப்பன் பே எனும் திறந்தவெளி பகுதியில் விமானம் நிறுத்தப்பட்டது.

அந்த விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறங்குவதற்கு லேடர் எனும் சாதாரண படிக்கட்டு இணைக்கப்பட்டது. அதன்மூலம் 100க்கும் மேற்பட்ட பயணிகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி, கொட்டும் மழையில் கீழே இறங்கி வரவேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இதனால் வயதான பயணிகள் கீழே இறங்கும்போது, படிக்கட்டில் கால் சறுக்கிவிடுமோ என்ற அச்சத்துடன் காணப்பட்டனர். பொதுவாக, மழைக்காலங்களில் கூடியமட்டும் ஏரோபிரிட்ஜ் மூலம் பயணிகளை விமானத்தில் இருந்து கீழே இறக்க ஏற்பாடு செய்யப்படும். அல்லது, மேற்கூரையுடன் கூடிய லேடர் படிக்கட்டுகளை பயன்படுத்துவர்.

எனினும், இந்த விதியை பின்பற்றாமல் நேற்று நள்ளிரவு விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை கொட்டும் மழையில் திறந்த படிக்கட்டின் வழியாக இறங்கிவர செய்த தனியார் ஏர்லைன்ஸ் அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் பயணிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயணிகளில் சிலர், சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதோடு, இணையதளம் வாயிலாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் ஒருசில பயணிகள் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக விமானங்களில் இருந்து பயணிகள் கீழே இறங்குவதற்கு, லேடர்கள் பொருத்துவது, அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் பணியாகும். இதேபோல் மழை பெய்யும்போது, சாதாரண லேடரை பொருத்தி, பயணிகளை மழையில் நனைய விட்ட சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி இதுபோல் நடக்காமல் இருக்க அனைத்து ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்படும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post சென்னை விமானநிலையத்தில் மழையில் நனைந்தபடி இறங்கிய விமானப் பயணிகள்: அதிகாரிகள் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Meenambakkam ,Chennai ,IndiGo Airlines ,Coimbatore ,
× RELATED அபூர்வ வகை, அபாயகரமான வன உயிரின...