புதுடெல்லி: விசாகப்பட்டினம் கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் அரிகாட் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கலாம்4 ஏவுகணை நேற்றுமுன்தினம் சோதிக்கப்பட்டது. அணுசக்தியில் இயங்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சுமார் 3,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது. இந்த சோதனையின் மூலம், நிலம், வான் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து அணு ஆயுத ஏவுகணையை செலுத்தும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. அதோடு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட அணுஆயுத ஏவுகணையின் முதல் சோதனை இதுவாகும்.
ஏற்கனவே திட எரிபொருள் ஏவுகணை கடந்த சில ஆண்டுகளில் நீரில் மூழ்கக்கூடிய தளங்களில் இருந்து குறைந்தது ஐந்து முறை சோதிக்கப்பட்டது. நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணுஆயுத ஏவுகணை சோதனைக்காக பயன்படுத்தப்பட்ட ஐஎன்எஸ் அரிகாட் கப்பல் கடந்த ஆகஸ்ட் 29 அன்று இந்தியாவின் அணுசக்தித் தடுப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 10 நாட்களுக்கு முன்பு, ஒடிசா கடற்கரையில் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. அப்படிப்பட்ட ஏவுகணை சோதனையை முடித்த வேகத்தில் இந்தியா தற்போது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
The post அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து 3,500 கிமீ தாக்கும் ஏவுகணை: இந்தியா வெற்றிகரமாக சோதனை appeared first on Dinakaran.