போர்ட்பிளேர்: அந்தமான் பாரேன் தீவு அருகே மியான்மரைச் சேர்ந்த 6 பேர் மீன்பிடி படகில் 6,000 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை கடத்தி வந்த போது இந்திய கடலோர காவல் படையினர் சிக்கிக் கொண்டனர். 6,000 கிலோ மெத்தாம்பெட்டமைனின் சர்வதேச மதிப்பு ரூ.36,000 கோடி. கடந்த 26ம் தேதி பிடிபட்ட அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்படுகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் நடுக்கடலில் வழிகாட்ட ஸ்டார்லிங்க் இணையவழி இன்டர்நெட் சேவையை பயன்படுத்தி உள்ளனர். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் மூலமாக அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது.
இதற்கான கையடக்க டிஸ் ஆன்டெனா கடத்தல் கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவிலோ, மியான்மரிலோ கிடையாது. ஆனால் இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற வேறு பிற பக்கத்து நாடுகளில் உள்ளது. நடுக்கடலில் எந்த இணைய சிக்னலும் கிடைப்பது சிரமமானது. இதனால், சாட்டிலைட் மூலம் இயங்கும் ஸ்டார்லிங்க் சேவையை மியான்மர் கடத்தல் கும்பல் பெற்றுள்ளது. இதுபோன்ற ஸ்டார்லிங்க் சேவையுடன் கடத்தல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை.
The post ரூ36,000 கோடி போதைப்பொருளை கடத்த ஸ்டார்லிங்க் இன்டர்நெட்டை பயன்படுத்திய கடத்தல் கும்பல் appeared first on Dinakaran.