×
Saravana Stores

அரசியலமைப்பு சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி மக்களவையில் எம்பியாக பதவியேற்றார் பிரியங்கா

புதுடெல்லி: அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி மக்களவையில் பிரியங்கா காந்தி எம்பியாக பதவி ஏற்றார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு, உபி மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அதில் ரேபரேலி தொகுதியை தக்கவைத்தார். வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து நவ.13ல் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ராகுல்காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி போட்டியிட்டார். நவ.23ல் தேர்தல் முடிவுகள் வெளியானது.

அதில் வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கான வெற்றிச்சான்றிதழை வயநாடு காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று முன்தினம் டெல்லி சென்று பிரியங்கா வசம் ஒப்படைத்தனர். இதையடுத்து நேற்று நாடாளுமன்றம் வந்த பிரியங்கா, வயநாடு எம்பியாக பதவி ஏற்றார். அவர் நாடாளுமன்றம் நுழைந்த போது காங்கிரஸ் எம்பிக்கள் ஆரவாரமாக வரவேற்றனர். நாடாளுமன்ற வாயிலில் அவரை நிறுத்தி, ராகுல்காந்தி புகைப்படம் எடுத்தார். அவருடன் இணைந்து காங்கிரஸ் எம்பிக்களும் நின்று குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கேரள பாரம்பரிய சேலை அணிந்தபடி மக்களவைக்கு வந்த அவர் அரசியல்சாசன சட்டப்புத்தகத்தை கையில் ஏந்தியபடி இந்தியில் பதவி ஏற்றார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள், ‘ஒற்றுமை, ஒற்றுமை, இந்தியாவின் ஒற்றுமை’ என்று குரல் எழுப்பினார்கள். எம்பிய பதவியேற்ற பிறகு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், சகோதரருமான ராகுல் காந்தியை கட்டியணைத்து வாழ்த்து பெற்றார். அதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பி ரவீந்திர சவான், மராத்தியிலும் கடவுளின் பெயரால் பதவியேற்றார். சமீபத்தில் அவரது தந்தை வசந்த்ராவ் சவான் காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

* 1972 ஜனவரி 12ல் பிறந்த பிரியங்கா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2019ல் தீவிர அரசியலில் களம் இறங்கினார். தற்போது தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* பிரியங்கா பதவி ஏற்றதை மக்களவை மாடத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரைஹான் மற்றும் மகள் மிராயா ஆகியோர் பார்வையிட்டனர்.

* ஒரே குடும்பத்தில் 3 பேர் எம்பி
பிரியங்கா எம்பியானதால் தாய் சோனியா, சகோதரர் ராகுலுடன் இணைந்து ஒரே குடும்பத்தில் 3 பேர் எம்பியாக நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். இது ஒரு அரிதான நிகழ்வு ஆகும். இதில் ராகுலும், பிரியங்காவும் மக்களவை எம்பியாகவும், சோனியா மாநிலங்களவை எம்பியாகவும் உள்ளனர்.

The post அரசியலமைப்பு சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி மக்களவையில் எம்பியாக பதவியேற்றார் பிரியங்கா appeared first on Dinakaran.

Tags : Priyanka ,Lok Sabha ,New Delhi ,Priyanka Gandhi ,Lok ,Sabha ,Rahul Gandhi ,Kerala ,Wayanad ,UP ,Raebareli ,
× RELATED நிலத்தடி நீர் மாசுக்கு தீர்வு என்ன? கனிமொழி எம்பி கேள்வி