* ரூ.20 லட்சம் மோசடி செய்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
சென்னை: சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில் வேலை வாங்கி தருவதாக 15 இளைஞர்களிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த நபரை, பணம் கொடுத்து ஏமாந்தவர்களே மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வேலைவாய்ப்பு ஆசை காட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம். இடைத்தரகர்கள் யாரும் கிடையாது என்று சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் கைநிறைய சம்பளத்துடன் கவுரவமான வேலை என்று பொய்யான தகவல்களை, படித்த இளைஞர்கள் மத்தியில் பரப்பி, ஒரு கும்பல் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி தொடர்ந்து பணம் மோசடி செய்து வருகிறது.
இந்த கும்பல் சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் குழுக்கள் போன்றவைகளில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் முத்திரையை போலியாக பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் அறிவிப்புகளை வெளியிடுகிறது. சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான நேர்முக தேர்வுகள் நடப்பதாகவும், அந்த அறிவிப்புகளில் வெளியிடப்படுகிறது.
இதை நம்பி இளைஞர்கள் பலர், அதில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்களை தொடர்பு கொண்டால் விண்ணப்ப படிவங்கள் ரூ.250 முதல் ரூ.500 வரை என்று கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த பணத்தை, ஆன்லைன் மூலமாக செலுத்துகின்றனர். அதில் கணிசமான ஒரு தொகையை அந்த மோசடி கும்பல் பெறுகிறது. பின்பு அந்த இளைஞர்களை சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள இடங்களுக்கு வரவழைத்து நேர்முகத் தேர்வு என்று நடத்துகின்றனர்.
சில நேரங்களில் அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களிலும் இதேபோல் நேர்முக தேர்வுகள் நடத்தி, சிலரை தேர்வு செய்து, அவர்களிடம் மோசடியாக பல ஆயிரத்தில் இருந்து, லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்றுக்கொண்டு, போலி பணி நியமன ஆணைகொடுத்து அனுப்புகின்றனர். இந்த பணி ஆணையுடன் பலர், சென்னை விமான நிலையத்தில், வேலையில் சேர்வதற்காக செல்லும் போது, அது போலியான பணி நியமன ஆணை என்பதை அறிந்து தங்களுடைய பணமும் பறிபோய் விட்டதே என்று இளைஞர்கள் கதறும் சம்பவங்கள் அவ்வப்போது, சென்னை விமான நிலையத்தில் நடந்து வருகிறது.
இதேபோல் சமீபத்தில், சென்னை விமான நிலைய சுங்கத்துறையில், அதிகாரிகள் பணிக்கு ஆட்கள் தேவை என்று கூறி, சென்னை புறநகர் பகுதியை சேர்ந்த தவான் (30) என்பவர் கால் டாக்ஸி ஒருவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர், தனக்கு தெரிந்த நண்பர்கள், வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் என்று 15 பேரிடம் ரூ.20 லட்சம் வசூல் செய்து, தவானிடம் கொடுத்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும், வேலை கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், விசாரித்த போது சுங்கத்துறையில் அதை போன்று யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை. மேலும் பணம் வாங்கிய தவான் என்பவர், ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் தனியார் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்தவர். இப்போது வேலை எதுவும் இல்லாமல் இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தவானை பிடித்து, பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
* இடைத்தரகர்கள் கிடையாது
சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘சென்னை விமான நிலையத்தில் புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி, படித்த இளைஞர்களிடம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய விமான நிலைய ஆணையம் பணிக்கு புதிதாக நியமனம் செய்வதாக இருந்தால் முறையாக இந்திய விமான நிலைய ஆணைய இணையதளத்தில், அதுகுறித்து விளம்பரங்கள் வெளியிடப்படும். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பிரபலமான முன்னணி பத்திரிகைகளில் இந்திய விமான நிலைய ஆணைய முத்திரைகளுடன் விளம்பரங்களும் வரும்.
அவைகளை பார்த்த பின்பு, விண்ணப்பதாரர்கள் முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்கு இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. மேலும் வேலைவாய்ப்புக்கு பணம் வாங்கும் முறையும் கிடையாது. இந்திய விமான நிலைய ஆணையம் கேட்கும், அனைத்து தகுதிகளும் இருக்குமேயானால், வேலைவாய்ப்பு, தகுதி அடிப்படையில் கிடைக்கும். எனவே படித்த இளைஞர்கள் இதேபோல் ஏமாறாமல் இருக்க வேண்டும்,’’ என்றனர்.
* நம்ப வேண்டாம்
இதுபோன்ற மோசடி விளம்பரங்களை நம்ப வேண்டாம், என அவ்வப்போது வலைதளங்கள் மூலம் எச்சரிக்கைகள் செய்கிறோம். ஆனாலும் இளைஞர்கள் பலர் பணம் கொடுத்து ஏமாறுகின்றனர். இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில், காவல்துறையிடம் ஏற்கனவே முறையாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த மோசடி கும்பலை காவல்துறையினர் தேடிக் கொண்டு இருக்கின்றனர், விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல் appeared first on Dinakaran.