மாதவரம்: ரிசர்வ் வங்கியில் மாற்றித் தரும்படி ஏஜென்ட் கொடுத்த ரூ.40 ஆயிரத்துடன் தலைமறைவான இருவரை, போலீசார் தேடி வருகின்றனர். மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு (70). கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்களை வைத்து, ரிசர்வ் வங்கியில் பணம் மாற்றிக் கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதற்காக கமிஷன் பெற்றுக் கொள்வார். இந்நிலையில், எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஆட்களை அழைத்து வரும் ஏஜென்ட் குணவழகன் என்பவர், நேற்று முன்தினம் 15 பேரை அழைத்து வந்துள்ளார். 20 ஆயிரம் ரூபாய் மாற்றிக்கொடுத்தால் 300 ரூபாய் கமிஷன், இந்த 300 ரூபாயில் 100 ரூபாய் குணவழகனுக்கு என பேசி முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, குணவழகன் தலைமையில் வந்த 15 பேரிடம் தலா 20,000 ரூபாய் என மொத்தம் 3 லட்சம் ரூபாய் கொடுத்து, பணத்தை மாற்றி வருமாறு பாபு, ரிசர்வ் வங்கி உள்ளே அனுப்பி வைத்தார். 13 பேர் மட்டுமே கொடுத்த பணத்தை மாற்றி பாபுவிடம் ஒப்படைத்தனர். இதில் தீதிஸ், விஜய் ஆகிய இருவர் தலா 20,000 ரூபாயுடன் மாயமாகினர். இதுதொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் பாபு புகார் அளித்தார். ஆட்களை அழைத்து வந்த ஏஜென்ட் குணவழகனை பிடித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணத்துடன் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
The post ரிசர்வ் வங்கியில் மாற்ற கொடுத்த ரூ.40 ஆயிரத்துடன் 2 பேர் ஓட்டம்: கமிஷன் ஏஜென்ட் போலீசில் புகார் appeared first on Dinakaran.