புதுடெல்லி:பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் பான் கார்டு 2.0 திட்டத்திற்காக ரூ.1435 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நமது நாட்டில் தற்போது 78 கோடி பேரிடம் பான் அட்டை உள்ளது. இதில் உள்ள 10 இலக்க அடையாள எண் மூலம், ஒருவரின் பண பரிவர்த்தனை வருமானவரித் துறையுடன் இணைக்கப்படுகிறது. தற்போது இந்த அட்டையை ரூ.1,435 கோடி செலவில் புதுப்பிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள பழைய பான் கார்டுகள் மற்றும் புது பான் கார்டுகள் கியூஆர் கோடு வசதியுடன் மேம்படுத்தப்படும். ஏற்கனவே பான் எண் வைத்திருப்பவர்களுக்கு பான் எண் மாறாது. ஆனால் பான் கார்டு மட்டும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டம் மூலம் தற்போது பான் கார்டு வைத்துள்ள 78 கோடி பேர், தங்கள் பான் கார்டுகளை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.
பான் 2.0 திட்டம் மூலம் பான் கார்டு வர்த்தகத்துக்கான அடையாள அட்டையாக மாறும். இதில் அனைத்து பான்/டான்/டின் எண்கள் ஒன்றிணைக்கப்படும். மேலும் பான் 2.0 திட்டத்தில் கட்டாய பான் தரவு பெட்டக அமைப்புடன் ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்படும். இந்த வசதியை, பான் தரவைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். தரவு பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
இதில் உள்ள முக்கியமான அம்சம் பான் தரவு பெட்டக அமைப்பு. பான் எண் தொடர்பான தகவல்களை வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அந்த நிறுவனங்கள் இனிமேல் பான் தரவு பெட்டக அமைப்பின் மூலம் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். இதற்கான அனைத்து பணிகளும் காகிதம் இன்றி ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும். பான் 2.0 அட்டை பெறுவதற்கான விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
என்னென்ன வசதி? என்ன செய்யலாம்?
* தற்போதுள்ள பான் கார்டுகள் பான் 2.0 திட்டத்தின் கீழ் செல்லுபடியாகும்
* கியூஆர் குறியீடு ஒரு புதிய அம்சம் அல்ல. இது 2017-18 முதல் பான் கார்டுகளில் இணைக்கப்பட்டுள்ளது. பழைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் கியூஆர் குறியீட்டைக் கொண்ட புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்
* கியூஆர் கோர்டு ஸ்கேன் செய்யும் போது, பான் கார்டின் முழுமையான விவரங்கள், குறிப்பாக புகைப்படம், கையொப்பம், பெயர், தந்தையின் பெயர்/தாயின் பெயர் மற்றும் பிறந்த தேதி காட்டப்படும்.
* பான் கார்டு புதுப்பிப்பு இலவசம். உடனடியாக இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும். ஆனால் கார்டு பெற ரூ.50 கட்டணம். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு அனுப்ப ரூ.65 மற்றும் அஞ்சல் கட்டணம் வசூலிக்கப்படும்.
* பான் கார்டு வைத்திருப்பவர்கள் மின்னஞ்சல், மொபைல் அல்லது முகவரி அல்லது பெயர், பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம்/புதுப்பிப்பு செய்ய விரும்பினால், இலவசமாகச் செய்யலாம்.
The post 78 கோடி பேருக்கும் கியூஆர் கோடு வசதியுடன் பான் கார்டு புதுப்பிப்பு: ரூ.1435 கோடியில் புதுத்திட்டம் appeared first on Dinakaran.