×
Saravana Stores

கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்களில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம்: 33 வட்டாரங்களில் பணி செய்ய அரசாணை

சேலம்: தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையை உள்ளடக்கிய 11 மாவட்டங்களில் 33 பகுதிகளை மேம்படுத்த வனத்துறை மூலம் எஸ்ஏடிபி திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசு சார்பில் மலை கிராம மேம்பாட்டு திட்டமும், மேற்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வந்தது. அந்த 2 திட்டங்களையும், கடந்த 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் பாஜ அரசு கைவிட்டது. இதையடுத்து அந்தந்த மாநில அரசுகள், மலைக்கிராம மக்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இந்தவகையில் தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2015-16ல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மேம்பாட்டிற்காக சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் (எஸ்ஏடிபி) தீட்டப்பட்டது.

இத்திட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 11 மாவட்டங்களில் மலை கிராமங்கள் மற்றும் மலைகளை ஒட்டியிருக்கும் கிராமங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. குறிப்பாக மலைக்கிராம மக்களின் மேம்பாட்டிற்காக சாலை, குடிநீர், கழிவறை, மின்சார தெருவிளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மேலும், மலைக்கிராம மக்கள் தொழில்கள் தொடங்க வழிவகையும், பசுமையாக்கல் பணியும் அத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு ₹75 கோடி செலவிட்டது. இந்நிலையில் தற்போது, தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைகள் இருக்கும் மாவட்டங்களிலும் மலைக்கிராம மக்கள் மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு அறிவித்ததன் அடிப்படையில் எஸ்ஏடிபி திட்டம் இறுதி வடிவம் பெற்று, அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைகள் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இருந்து 82 வட்டாரங்களை மேம்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது. அதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் நடத்திய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் மதிப்பீட்டின்படி, கடல் மட்டத்தில் இருந்து 400 மீட்டர் உயரத்தில் உள்ள 33 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த 33 வட்டாரங்களும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ளன.

இந்த 33 வட்டாரங்களிலும் மாநில அரசு, தனது சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி, மேம்பாட்டு பணிகளை செய்யவுள்ளது. இதில், சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மத்தியில் உள்ள கல்வராயன் மலை உட்பட பல்வேறு மலைகளில் முழுமையான வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பாதுகாப்பை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பழங்குடியின மக்கள் பெரிதும் பயனடையவுள்ளனர். அதாவது, மலைக்கிராம பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவுள்ளனர். இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில், பெரும்பாலான பகுதிகள் பின்தங்கியவை. அதனால், அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு எஸ்ஏடிபி திட்டம் முன்னுரிமை அளிக்கும் என்றும், நிலையான வளர்ச்சி, பல்லுயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, மண், நீர், வனப்பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றை செய்திடும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘முழுமையாக மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தை வனத்துறை செய்கிறது. இதற்காக அந்தந்த மாவட்ட வன அலுவலர்கள் மூலம் மலைக்கிராமங்கள் மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளில் பசுமை வளர்ச்சி பணிகள் செய்யப்பட இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பழங்குடியின மக்கள் எத்தகைய முன்னேற்றத்தை பெற்றார்களோ, அதுபோலவே கிழக்கு தொடர்ச்சி மலை பழங்குடியின மக்களும் முன் ேனற்றத்தை பெறுவார்கள். அதற்கான பணிகள் எஸ்ஏடிபி திட்டத்தில் மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.

The post கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள 11 மாவட்டங்களில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம்: 33 வட்டாரங்களில் பணி செய்ய அரசாணை appeared first on Dinakaran.

Tags : districts ,Eastern Ghats ,Salem ,SADP ,Forest Department ,Tamil Nadu ,Union Government ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை