- தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் வளர்ச்சிக் கழகம்
- பூம்புகார்
- அமைச்சர்
- தமோ அன்பரசன்
- மாமல்லபுரத்தில்
- தி.மோ.அன்பராசன்
- பூம்புகார்
- முதல் அமைச்சர்
- அமைச்சர் த.மோ.அன்பரசன்
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், பூம்புகார் கைவினைஞர்கள் விருதுகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கி கவுரவித்தார். பூம்புகார் என்ற பெயரால் அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் கடந்த 1973ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞரால் துவக்கப்பட்டது. கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் இந்தியா முழுவதும் புதுடெல்லி உள்பட 13 விற்பனை நிலையங்கள் மற்றும் கொல்கத்தா உள்பட 9 துணை விற்பனை கூடங்களை நடத்தி வருகிறது.
மக்களிடையே, கைவினைப் பொருட்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மற்றும் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் பொருட்டும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 5ம் தேதி கைவினை கலைஞர்கள் தினம் என அறிவித்தது. அன்றைய தினத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். இதற்காக, தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.35 லட்சம் நிதி உதவி வழங்குகிறது.
தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு, கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்குடனும், அவர்களது திறமையினை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் நோக்கத்துடனும் பல்வேறு விருதிற்கான போட்டிகளை நடத்தி விருதுகளை கைவினைஞர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், பூம்புகார் கைவினைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. இதில், குறு – சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மே.அன்பரசன் கலந்து கொண்டு, ‘குழு உற்பத்தி விருது’ இவ்விருது 3 குழுக்கள், மற்றும் ‘பயன்பாடு சார்ந்த கைவினைப் பொருட்கள் விருது’ 3 கைவினைஞர்களுக்கு ரூ.40 ஆயிரம், 4 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பத்திரம் மற்றும் சான்றிதழும் வழங்கி கவுரவித்தார்.
இதையடுத்து, 2022-23ம் ஆண்டின் பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 16 வகையான கைத்திறன் தொழிலில் 30 பெண் கைவினைஞர்கள் உட்பட 85 சிறந்த கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல், 30 வயதிற்குட்பட்ட இளம் கைவினைஞர்களுக்காக நடத்தப்பட்ட கைத்திறன் போட்டியில் 150 கைவினைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.2 ஆயிரம், வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை அரசு செயலாளர் அமுதவள்ளி, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநர் அமிர்தஜோதி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ். சப் – கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் விசுவநாதன், திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன், முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, திருக்கழுக்கும் பேரூராட்சி தலைவர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் பூம்புகார் கைவினைஞர்களுக்கு விருது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.