செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இருப்பதால், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்தநிலையில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து 9 மணி முதல் சாரல் மழை விட்டுவிட்டு பெய்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் திம்மாவரம், ஆத்தூர், பாலூர், தேவனூர், வல்லம், ஆலப்பாக்கம், மேலமையூர், வீராபுரம், அஞ்சூர், தென்மேல்பாக்கம், கொண்டமங்கலம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
அதேபோல் பரனூர், சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், பொத்தேரி, காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன. இம்மழையின் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.அதோபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால், விவசாயிள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
* மாமல்லபுரத்தில் கனமழை
மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று முழுவதும் விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால், கோவளம் சாலை கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜ வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, ஐந்து ரதம் சாலை, கடற்கரை செல்லும் சாலையில் வெள்ளம் புரண்டோடியது. குறிப்பாக, கிழக்கு ராஜவீதி ஐஓபி வங்கி அருகே மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும், அவ்வழியாக சென்ற வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து சென்றது. கன மழையால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த கனமழையால், மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குப்பங்களில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post செங்கல்பட்டில் வெளுத்து வாங்கிய கனமழை appeared first on Dinakaran.