திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் இன்று அதிகாலை சாலை ஓரத்தில் குடில் கட்டி தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மரத்தடி ஏற்றி வந்த லாரி மோதியதில் தமிழர்கள் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் நாட்டிகா பகுதியில் புறவழிச்சாலை அருகே ஏராளமான தொழிலாளர்கள் குடில் கட்டி வசித்து வருகின்றனர். நேற்று இரவு வழக்கம்போல அவர்கள் தங்களது குடில்களில் படுத்து தூங்கினர். இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் கண்ணூரில் இருந்து கொச்சிக்கு மரத்தடிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி குடில்களில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. அவர்கள் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றது. தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்கள் கதறினர். அவர்களது சத்தத்தைக் கேட்டு அந்த பகுதியினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து வலப்பாடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காளியப்பன் (50), நாகம்மா (39), ஜீவன் (4), விஸ்வா (1) ஆகியோர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
இது தவிர 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரியை பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து மடக்கிப் பிடித்தனர். இது தொடர்பாக கண்ணூரைச் சேர்ந்த லாரி டிரைவர் ஜோஸ், கிளீனர் அலெக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் லாரியை ஓட்டியது கிளீனர் அலெக்ஸ் என்பது தெரியவந்தது. அவருக்கு லைசென்ஸ் கிடையாது. மேலும் குடிபோதையில் இருந்துள்ளதும் தெரியவந்தது. விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. வாகனங்கள் எதுவும் வராத பகுதியில் தான் குடில்கள் கட்டப்பட்டு இருந்தன.
வாகனங்கள் அந்த பகுதிக்கு செல்லக்கூடாது என்பதற்காக அங்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் தடுப்புகள் மீது மோதிய பின்னர் தான் லாரி குடில்கள் மீது மோதியது என்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி உடனே அறிக்கை தாக்கல் செய்யுமாறு போக்குவரத்து ஆணையாளர் நாகராஜுக்கு கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் கணேஷ்குமார் உத்தரவிட்டு உள்ளார். இதற்கிடையே விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவர். இவர்கள் பல வருடங்களுக்கு முன்பு பாலக்காடு அருகே கோவிந்தாபுரம் பகுதியில் குடியேறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் கூலித்தொழில் செய்து வந்தனர். கடந்த சில வருடமாக திருப்ரையார் கோயில் மைதானத்தில் தான் குடில் கட்டி தங்கியிருந்தனர்.
திருப்ரையார் கோயிலில் ஏகாதசி திருவிழா நடைபெறுவதால் மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இவர்கள் விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள இடத்திற்கு மாறினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The post கேரளாவில் சாலையோரம் தூங்கிய போது லாரி மோதியது; தமிழர்கள் 6 பேர் உடல் நசுங்கி பலி: 8 பேருக்கு சிகிச்சை appeared first on Dinakaran.