வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் வாழை சாகுபடியை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள், மான்கள், காட்டுமாடு, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. இதில், காட்டுயானைகள் உணவு, தண்ணீர் தேடி மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களுக்கு அடிக்கடி வருகின்றன. அப்போது விளைநிலங்களில் உள்ள மா, தென்னை, பலா, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இறங்கிய காட்டு யானைகள் மூலக்காடு பகுதி மற்றும் பெருமாள்பாறை பகுதியில் உள்ள மா தோப்பிற்குள் நுழைந்து அங்குள்ள மா, தென்னை, பலா, வாழை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியுள்ளன. இப்பகுதியில் இருந்து 800 மீ தொலைவில் குடியிருப்பு பகுதி உள்ளது.
இதனால், அப்பகுதி பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வனத்துறை நிவாரணம் வழங்க வேண்டும். காட்டு யானைகளை வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப வேண்டும். வனப்பகுதியில் சுற்றி மின்வேலிகள் அமைத்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வத்திராயிருப்பு பகுதியில் காட்டு யானைகளால் வாழை சாகுபடி சேதம்: தொடர் சம்பவங்களால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.