மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் கை நிறைய சம்பளத்துடன் கவுரவமான வேலை என பொய்யான தகவல்களை, படித்த இளைஞர்களிடம் பரப்பி ஒரு கும்பல் மோசடி செய்து வருகிறது. இந்த கும்பல் சமூக வலைதளங்கள் வாட்ஸ் அப் குழுக்கள் போன்றவைகளில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் முத்திரையை போலியாக பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் இந்த அறிவிப்புகளை வெளியிடுகிறது. அதில், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான நேர்முக தேர்வுகள் நடப்பதாகவும் வெளியிடப்படுகிறது.
இதை நம்பி இளைஞர்கள் பலர், அதில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்களை தொடர்பு கொண்டால், விண்ணப்பபடிவங்கள் ரூ.250 முதல் ரூ.500 வரை என்று கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த பணத்தை, ஆன்லைன் மூலமாக செலுத்துகின்றனர். பின்பு அந்த இளைஞர்களை சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள இடங்களுக்கு வரவழைத்து நேர்முக தேர்வு என்று போலியாக நடத்துகின்றனர். சில நேரங்களில் விழுப்புரம், கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களிலும் போலி நேர்முக தேர்வுகள் நடத்தி, சிலரை தேர்வு செய்து, லட்சக்கணக்கில் பணத்தை பெற்று கொண்டு, போலி நியமன ஆணையை வழங்குகின்றனர். அதை உண்மை என நினைத்து சென்னை விமான நிலையத்திற்கு வேலைக்கு வருகின்றனர். அப்போதுதான் அவர்களுக்கு வழங்கப்பட்டது போலியான வேலை நியமன ஆணை என அறிந்து தங்களுடைய பணமும் பறிபோய் விட்டதே என்று கதறுகின்றனர்.
இதேபோல் சமீபத்தில், சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் அதிகாரிகள் பணிக்கு ஆட்கள் தேவை என்று கூறி, சென்னை புறநகர் பகுதி சேர்ந்த தவான் (30) என்பவர், ஒருவரிடம் கூறியுள்ளார். உடனே அவர், தனக்கு தெரிந்த நண்பர்கள், வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் என்று 15 பேரிடம், ரூ.20 லட்சம் வசூல் செய்து, தவானிடம் கொடுத்துள்ளார். பல நாட்களாகியும் வேலை கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள், விசாரித்த போது, சுங்கத்துறையில் அதை போன்று யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை என்றும் பணம் வாங்கிய தவான், சென்னை விமான நிலையத்தில் தனியார் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்தவர், இப்போது வேலை எதுவும் இல்லாமல் இருக்கிறார் என்றும் தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து ஏமாற்றமடைந்தவர்கள், தவானை பிடித்து, பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் மீண்டும் பணம் கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன என ஏமாற்றி இளைஞர்களிடம் பெருமளவு பணம் மோசடி செய்வது, தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘பணிநியமனம் தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணைய இணையதளத்தில் முறையாக விளம்பரங்கள் வெளியிடப்படும். அதுமட்டுமின்றி பிரபலமான முன்னணி பத்திரிகைகளில், இந்திய விமான நிலைய ஆணைய முத்திரைகளுடன் விளம்பரங்களும் வரும்.
அவைகளை பார்த்த பின்பு முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்கு இடைத்தரகர்கள் கிடையாது. மேலும் வேலைக்கு பணம் வாங்கும் முறையும் கிடையாது. வேலை வாய்ப்பு, தகுதி அடிப்படையில் கிடைக்கும். எனவே படித்த இளைஞர்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும். இதுகுறித்து அவ்வப்போது வலைதளங்கள் மூலம் எச்சரிக்கைகள் செய்கிறோம். ஆனாலும் இளைஞர்கள் ஏமாறுகின்றனர். இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில், காவல்துறையிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்’ என்றனர்.
The post சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் வேலை என கூறி 15 இளைஞர்களிடம் ரூ.20 லட்சம் மோசடி: கும்பலுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.