*1 கிலோ கஞ்சா பறிமுதல்
நெல்லை : அம்பையில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற வியாபாரியை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டத்தில் எஸ்பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் கஞ்சா வியாபாரிகள், கஞ்சா சப்ளையர்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அம்பையில் கஞ்சா வியாபாரி ஒருவர் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பை இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் எஸ்ஐ ஆனந்த பாலசுப்ரமணியன், ஏட்டு மகேஷ்குமார், முதல் நிலை காவலர் மார்ட்டின் ஆகியோர் அம்பை. கோவில்குளம் பகுதியில் உள்ள சந்தேக வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு கிலோ கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக அந்த வீட்டில் இருந்த செல்லையா மகன் இசக்கி முத்து என்ற அய்யப்பன் (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
மேலும் இசக்கி முத்து என்ற அய்யப்பன் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்(பிசிஆர்) கீழ் கைதானவர் என்பதும், அவர் மீது 2 பிசிஆர் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா வியாபாரியான இசக்கி முத்து என்ற அய்யப்பனை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
பாக்கெட் போட்டு கஞ்சா விற்பனை
போலீசாரால் கைதான இசக்கி முத்து என்ற அய்யப்பன் வீட்டில் மொத்தமாக கஞ்சாவை வாங்கி பாக்கெட் போட்டு போதை வாலிபர்களுக்கு விற்பனை செய்து வந்தார். அதன்படி கஞ்சாவை 15 சிறிய பாக்கெட்டுகளில் போட்டு விற்பனைக்காக தயாராக இருந்த நிலையில் அவர் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘விரைவில் கஞ்சா நெட்வொர்க்கை கைது செய்வோம்’’ என்றனர்.
The post அம்பையில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற வியாபாரி கைது appeared first on Dinakaran.