×
Saravana Stores

கோவில்பட்டியில் பரபரப்பு மாஜி பிஎஸ்என்எல் அதிகாரியிடம் ரூ.15.50 லட்சம் மோசடி

*வாலிபர் சிறையிலடைப்பு

*மேலும் 3 பேருக்கு வலை

கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ்நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் சவரிராஜ் (67). இவர் கோவில்பட்டி பிஎஸ்என்எல்லில் உதவி பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கும், தேனி மாவட்டம் சீலையம்பட்டி திருமண மண்டப தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் ராமகிருஷ்ணன் (31) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் சவரிராஜிடம், ராமகிருஷ்ணன், அகில இந்திய ரயில் பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கமிட்டி உறுப்பினராகவும், மேலும் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அகாடமி என்ற தனிப்பயிற்சி கல்வி நிறுவனம் நடத்த அனுமதி பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அகில இந்திய ரயில் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக தஞ்சை மாவட்டம், பட்டீஸ்வரம், ராஜராஜ நகரைச் சேர்ந்த பத்மநாபன் (54), செயலாளராக சென்னை தண்டையார்பேட்டை ஜீவாநகர் 2வது தெருவைச் சேர்ந்த சேகர் மனைவி காந்தி (46), தலைமை ஒருங்கிணைப்பாளராக தேனி மாவட்டம், சின்னமனூர், பட்டாளம்மன் கோயில் தெரு, வஉசி நகரைச் சேர்ந்த அய்யனார் மகன் ஜமீன்பிரபு ஆகியோரும், தலைமை ஒருங்கிணைப்பாளராக ராமகிருஷ்ணனாகிய தானும் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து ஆலோசனை கமிட்டி உறுப்பினர் பதவி மற்றும் தனி பயிற்சி கல்வி நிறுவனம் நடத்துவதற்கு பல்வேறு கட்டங்களாக 4 பேரும் சேர்ந்து, சவரிராஜிடம் ரூ.15 லட்சத்து 36 ஆயிரத்தை பெற்றுள்ளனர்.இதை நம்பி, இந்த பயிற்சி நிறுவனம் நடத்துவதற்கு சவரிராஜ், கோவில்பட்டியில் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்திருந்தார். ஆனால் அகில இந்திய ரயில் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கமிட்டி உறுப்பினருக்கான சான்றிதழ் மற்றும் தனி பயிற்சி கல்வி நிறுவனம் நடத்துவதற்கான அங்கீகார எண்ணை தராமல் ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்தை மோசடி செய்ததோடு, செல்போன்களையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டனர்.

இதுகுறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சவரிராஜ் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின்படி, கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் ஜமீன்பிரபு, தேனி மாவட்டம் சின்னமனூர் கரிச்சிபட்டியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவான 3 பேரை பிடிக்க கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் ஜீன்னா பீர் முகைதீன் தலைமையில் எஸ்ஐ நீதிகண்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

The post கோவில்பட்டியில் பரபரப்பு மாஜி பிஎஸ்என்எல் அதிகாரியிடம் ரூ.15.50 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Maji BSNL ,Govilpatty ,SAVARIRAJ ,KOVILPATTI RAJIVNAGAR ,5TH STREET, TUTHUKUDI DISTRICT ,Kovilpatty BSNL ,Theni ,District ,Seeliampatti ,Kovilpatty ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் பரபரப்பு மது குடிக்க பணம் கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்