×
Saravana Stores

இலவச பயிற்சி மூலம் 1000 பேருக்கு அரசு வேலை சாதிக்கும் தேனி வேலைவாய்ப்பு அலுவலகம்

தேனி : தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் மூலம் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு பணியாளர்களாக பணியமர்ந்துள்ளதாக தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்தார்.தமிழ்நாடு முதல் அமைச்சராக கலைஞர் கருணாநிதி, கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தபோது, நிர்வாக வசதியின் காரணமாக மதுரை மாவட்டத்தில் இருந்து தேனியை தலைமையிடமாகக் கொண்டு தேனி மாவட்டத்தை உருவாக்கினார்.

தேனி மாவட்டம் உருவானதையடுத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட மாவட்ட அளவிலானத் அனைத்துத் துறை அலுவலகங்களும் தேனியில் தொடங்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

இதில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் கல்வித் தகுதியை பதிவு செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் பணியை மட்டுமே செய்து வந்த வேலைவாய்ப்புத் துறையானது, தற்போது வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டும் மையமாக உருவெடுத்து செயல்பட்டு வருகிறது. இதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்ட மையமும் வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சியில் பணி நியமனத் தடைச் சட்டம்:

தமிழ்நாடு முதல் அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2001ம் ஆண்டு பொறுப்பில் இருந்தபோது, அரசு பணி நியமனத் தடைச்சட்டம் கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் மூலம் 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு எந்தத் துறையிலும் நிரந்தரப் பணியிடத்தில், பணிநியமிக்காமல் அனைத்து பணியிடங்களையும் ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. இதனால் அப்போது ஐந்து ஆண்டுகாலம் படித்த இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணியில் சேரமுடியாமல் பாதிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து 2006ம் ஆண்டு, கலைஞர் தமிழ்நாடு முதல் அமைச்சரான பிறகு, பணிநியமனத் தடைச்சட்டத்தை ரத்து செய்து, பணிநியமனத் தடைச் சட்டத்தால் 5 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் அரசு பணிக்கு செல்ல இருந்த வயது வரம்பில் 5 ஆண்டு காலத்தை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றதும், தமிழ்நாடு அரசால் நியமிக்கப்படும் பெரும்பாலான பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் மட்டுமே நிரப்ப உத்தரவிடப்பட்டது. இதன்படி, இளநிலை உதவியாளர் பணி முதல் குரூப் 2 பணியிடம் வரையிலான அனைத்து பணிகளும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனால் கலைஞர் தலைமையிலான திமுக அரசு அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்களை மேம்படுத்தியது.

நாள்தோறும் பயிற்சி வகுப்புகள்:

இதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முதல் டிஎன்பிஎஸ்சி 2, யுபிஎஸ்சி, எஸ்.எஸ்.சி, பேங்கிங், டிஆர்பி, ரயில்வே போர்டு உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களை தருவித்து, அதனை தன்னார்வ பயிலும் வட்ட நூகலத்தில் பொக்கிசமாக பாதுகாத்து வருகிறது.

இதில் நாள்தோறும் சுமார் 50 பேர் வரை பயின்று வருகின்றனர். இதேபோல, தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் சார்பில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக கூட்ட அரங்கில் நாள்தோறும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டும் மையத்தில் சிறந்த கல்வியாளர்களை கொண்டு டிஎன்பிஎஸ்.சி, போலீஸ் தேர்வு, வங்கித்தேர்வு, யுபிஎஸ்சி, எஸ்எஸ்.சி, விஏஓ தேர்வுகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்டோர் அரசு பணிக்கு தேர்வு:

பயிற்சி பெறுபவர்களுக்கு அந்தந்த போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தின்படி, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, இந்திய அரசியல் அறிவியல் போன்ற பாடங்களில் நிபுணத்துவம் படைத்த சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பெறுபவர்களுக்கு குழு கலந்தாய்வு, மாதிரி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு பணிகளுக்கு சென்றுள்ளனர்.

இதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி குருப் 2 மற்றும் 2ஏ தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு சமீபத்தில் நடந்தது. இத்தேர்வுக்கான முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

கடந்த டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வில் இம்மையத்தில் பயின்றவர்களில் 13 பேர் தில் அதிக மதிப்பெண்களை பெற்று அரசு பணிபெறும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் வாழ்த்தினார்.

போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி:

இது குறித்து தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமாபிரபா கூறியதாவது: தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசின் அனைத்து பணிகளுக்கும் போட்டித் தேர்வுகள் மூலம் பணிநியமனம் நடந்து வருகிறது.

இத்தகைய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தனியார் மையங்களில் அதிக கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு பணிக்கு விண்ணப்பிப்போர் ஏழை, எளியோர் இலவசமாக பயிற்சி பெறும் வகையில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் அனைத்து பாடங்களுக்கும் தனித்தனியாக பாடங்களை சிறந்த கல்வியாளர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயில்பவர்களுக்கு இலவசமாக கையேடுகள், பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குரூப் டிஸ்கசன், மாதிரி போட்டித் தேர்வுகள் நடத்தி, மாதிரி மதிப்பெண்கள் வழங்கி தேர்வுக்கு விண்ணப்பிப்போர் தயார்படுத்தப்படுகின்றனர். தேனியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் பயில்வோர் ஒவ்வொரு போட்டித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று அரசுப்பணிக்கு சென்று சாதனை படைத்து வருகின்றனர். எனவே, போட்டித் தேர்வுக்கு செல்பவர்கள் இம்மையத்தை முழுமையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றார்.

The post இலவச பயிற்சி மூலம் 1000 பேருக்கு அரசு வேலை சாதிக்கும் தேனி வேலைவாய்ப்பு அலுவலகம் appeared first on Dinakaran.

Tags : Theni Employment Office ,Theni ,Theni District Employment Officer ,Theni District Employment Office ,Kalain Karunanidhi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அதிகரித்து வரும் போக்குவரத்து...