- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- இந்து மதம்
- அறக்கட்டளைகள்
- சேகர்பாபு
- அறுபடை வீடு
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- இந்து மதம் சார்ந்த மானியங்கள்
சென்னை: 200 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (26.11.2024) சென்னை, கந்தகோட்டம் அருள்மிகு முத்துக்குமாரசாமி திருகோயிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 200 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள விரும்பும் மூத்த குடிமக்களின் பொருளாதார சூழல் மற்றும் அவர்களுடன் துணையாக சென்று உதவிடும் நிலை இல்லாமல் இருக்கின்ற மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாமல் பல்வேறு ஆன்மிகப் பயணங்களை அரசு மானியத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சீனாவில் உள்ள மானசரோவர் புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கு அரசு மானியம் ரூ.40ஆயிரத்திலிருந்து ரூ.50ஆயிரமாகவும், நேபாளத்திலுள்ள முக்திநாத் திருக்கோயிலுக்கு புனித பயணம் செல்லும் 500 நபர்களுக்கு அரசு மானியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்தை ஒன்றிய அரசு செயல்படுத்துவதற்கு முன்பாகவே அறிவித்து செயல்படுத்திய ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாகும்.
2022 – 23 ஆம் நிதியாண்டில் ரூ.50 லட்சம் அரசு மானியத்தில் 200 மூத்த குடிமக்களும், 2023 – 24 ஆம் நிதியாண்டில் ரூ.75 லட்சம் அரசு மானியத்தில் 300 மூத்த குடிமக்களும் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு ரூ.1.05 கோடி அரசு மானியத்தில் 420 மூத்த குடிமக்கள் வருகின்ற 2025 பிப்ரவரி மாதம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும் ஆண்டுதோறும் தலா 1,000 பக்தர்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
இதற்கு ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்களுக்காக அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் 28.01.2024 அன்று இதே கந்தக்கோட்டத்தில் தொடங்கப்பட்டு 5 கட்டங்களாக 1,008 பக்தர்கள் பயன்பெற்றுள்ளனர். இரண்டாவது ஆண்டாக இன்றைய தினம் சென்னை மண்டலத்திலிருந்து 90 நபர்களும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 60 நபர்களும், வேலூர் மண்டலத்திலிருந்து 50 நபர்களும் என மொத்தம் 200 நபர்கள் 3 நாட்கள் ஆன்மிகப் பயணமாக புறப்படுகின்றனர்.
2025 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1,008 மூத்த குடிமக்கள் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தை நிறைவு செய்வார்கள். இத்திட்டத்திற்காக அரசு ரூ.1.58 கோடி நிதி வழங்கியுள்ளது. இந்த ஆட்சி வந்த பிறகு முதல் முதலில் அறிவித்து செயல்படுத்தப்பட்ட பௌர்ணமி திருவிளக்கு பூஜை திட்டமானது தற்போது 17 அம்மன் திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு திருக்கோயில்களிலும் பௌர்ணமி தினத்தன்று 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கின்றனர். மொத்த செலவில் நான்கில் ஒரு பங்கு கட்டணம் பக்தர்களிடமிருந்து பெறப்பட்டும், இதர மூன்று பங்கு திருக்கோயில் நிர்வாகமும் வழங்குகிறது.
இதுவரை திருவிளக்கு பூஜை திட்டத்தில் 47,304 பெண்கள் பயன்பெற்றுள்ளனர். அதேபோல் திருக்கோயில்கள் சார்பில் கட்டணமில்லாமல் சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் 500 இணைகளுக்கும், 2023 ஆம் ஆண்டில் 600 இணைகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட 700 இணைகளுக்கான திருமணங்களில் 400 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மூன்றாண்டுகளில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆன்மிகப் பயணங்களுக்கு சென்று வந்த 3000 பக்தர்களுக்கு அரசு மானியமும், காசி – இராமேஸ்வரம் ஆன்மிகப் பயணத்தில் 920 பக்தர்களும், ஆடி மாத அம்மன் திருக்கோயில் பயணத்தில் 3000 பக்தர்களும், புரட்டாசி மாத வைணவ திருக்கோயில் பயணத்தில் 3000 பக்தர்களும், அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் இரண்டாண்டுகளில் 2,016 பக்தர்களும் பயன்பெற்றுள்ளனர். சூரியனார் கோயில் ஆதீனம் நியமனம் தொடர்பாக சட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் 5-ந் தேதி தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் திருக்கோயிலில் புதிய வெள்ளித் தேர் வெள்ளோட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளோம். அன்றைய தினம் அனைத்து ஆதீனங்களும், ஒன்று கூடுவதாக தெரிவித்துள்ளார்கள். முதலமைச்சர் ஆலோசனைகளை பெற்று துறை சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். எல்லோருக்கும் எல்லாம் என்று ஆட்சி செய்யும் முதல்வர் , எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை நிச்சயமாக அனுமதிக்க மாட்டார்.
கானா பாடகி இசைவாணி பாடிய பாடல் சர்ச்சை குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது என பத்திரிகை வாயிலாக அறிந்தேன். இதுகுறித்து சட்ட வல்லுனரோடு கலந்து ஆலோசித்து தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கையை இந்த ஆட்சி எடுக்கும். மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள் இந்த ஆட்சியில் தலை தூக்க முடியாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கின்றார்கள். இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் இந்து அல்லாதவர்களை நியமிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய அறநிலைத்துறை சட்டமும் அதைத்தான் சொல்கிறது. எனவே, நீதிமன்றம் வழிகாட்டுகின்றபடி சட்ட வல்லுனரோடு ஆலோசித்து அதன்படி செல்வோம். கடந்த ஆண்டு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு வேப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்கர் பச்சன் முதல்வரை புகழ்ந்து பேசிய அளவிற்கு இதுவரை திராவிட முன்னேற்றக் கழக பேச்சாளர் கூட பேசியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு புகழ்ந்தவர். தற்போது விமர்சித்துள்ளார். இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.
யானைக்கு புத்துணர்ச்சி முகாம் குறித்து தெளிவான விளக்கங்களை ஏற்கனவே அளித்துள்ளோம். இந்த ஆட்சியில் திருக்கோயில் யானைகளுக்கு அங்கேயே குளியல் தொட்டி, நடைபாதை, மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனை, மருத்துவர்களின் ஆலோசனையின்படி உணவுகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. எனவே, புத்துணர்ச்சி முகாம் தேவைப்படவில்லை. அதற்கான தேவை ஏற்படுமாயின் நிச்சயம் அதையும் மேற்கொள்ள இந்த ஆட்சியும் இந்து சமய அறநிலைத்துறையும் தயாராக இருக்கின்றது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆப., இணை ஆணையர்கள் ச.லட்சுமணன், பொ.ஜெயராமன், ஜ.முல்லை, உதவி ஆணையர் கே.சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post 200 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி ஆன்மிகப் பயணத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.