×
Saravana Stores

நோய் பாதிப்பால் செடியிலேயே அழுகி வீணாகும் தக்காளி

*வருவாய் இழப்பால் விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நோய் தாக்குதலால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, செடிகளிலேயே அழுகி வீணாகி வருகிறது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், தோட்டக்கலை துறையினர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு உகந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 888 ஹெக்டேர் ஆகும்.

அதில் தோட்டக்கலை பயிர்கள் சுமார் 80,499 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. மா, வாழை, தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், மஞ்சள், ரோஜா, ஜெர்பரா ஆகியவையும், கார்னேஷன், ஜாஸ்மின் போன்ற பூச்செடிகளும் பயிரிடப்படுகிறது. குறிப்பாக மா சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது.

மாவட்டத்தின் சராசரி மழை அளவு 842 மி.மீ ஆகும். விவசாயிகள் உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்க, தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். இதே போல் ஓசூர், ராயக்கோட்டை, சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும், சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது உழவர் சந்தை, மார்க்கெட் மற்றும் வாரச்சந்தைகளின் ஒரு கிலோ தக்காளி ரூ.36 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் உத்தனப்பள்ளி, உலகம், பாகலூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள தக்காளி செடிகளில் நோய் தாக்கி, தக்காளி பிஞ்சிலேயே பழுத்து வெதும்பி கீழே உதிர்கின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து மெட்டறை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:எங்கள் பகுதியில் ஆண்டு முழுவதும் தக்காளி மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தக்காளி நாற்று ஒன்று ரூ.2க்கு வாங்குகிறோம். நன்கு விளைந்த பிறகு, தொடர்ந்து 3 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். இதேபோல் வெளி மாநிலத்தில் இருந்து ஒரு நாற்று ரூ.15க்கு வாங்கினோம். இந்த நாற்று மூலம் விளையும் தக்காளி 6 மாதங்கள் அறுவடை செய்யப்படும்.

இரண்டு வகையான நாற்றுகளை, சுமார் ரூ.5 லட்சத்திற்கு வாங்கி, 5 ஏக்கரில் நடவு செய்தோம். மேலும், பராமரிப்பு செலவாக ரூ.4 லட்சம் வரை செய்தோம். ஆனால், முதல் அறுவடைக்கு முன்பே இலையில் நோய் தாக்கி, தக்காளி சிறுத்து பிஞ்சிலேயே வெதும்பி கீழே உதிர்கிறது. இதற்கு மருந்து தெளித்தாலும், நோயை கட்டுப்படுத்த முடியவில்லை.

தற்போது தக்காளிக்கு நிலையான விலை இருந்தும், நோய் பாதிப்பால் 60 சதவீதம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் பாதித்த தக்காளிக்கு மார்க்கெட்டில் உரிய விலை கிடைப்பதில்லை. சாகுபடி செய்த தக்காளி மூலம் ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், நோய் பாதிப்பால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து, எந்த வகையான நோயால் தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்து, மாற்று மருந்து தெளிக்க உரிய ஆலோசனை வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post நோய் பாதிப்பால் செடியிலேயே அழுகி வீணாகும் தக்காளி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,
× RELATED பெண்களுக்கு பாதுகாப்பு.. தமிழ்நாடு முன்னணி மாநிலம்: அமைச்சர் கீதா ஜீவன்!!