×
Saravana Stores

ரூ.27 கோடியில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமை செயலகத்தில் ரூ.27 கோடியில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆண்டிப்பாளையம், அந்தியூர் ஏரி உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலங்களும் ஓகேனக்கல் அருவி, கொல்லிமலையில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலங்களும் திறக்கப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.11.2021) தலைமைச் செயலகத்தில், சுற்றுலாத் துறை சார்பில் ஒகேனக்கல் அருவிப் பகுதிகள், கொல்லி மலை, ஆண்டிபாளையம் ஏரி, வத்தல்மலை, முட்டம் கடற்கரை, அந்தியூர் ஏரி, மன்னார்குடி ஹரித்ராநதி கோயில் குளம் ஆகியவை 27 கோடியே 34 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலாத் துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலாத் தலங்கள். பழம்பெரும் திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டு உருவாக்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், சுற்றுலா பயணத்திட்டங்கள், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், படகு குழாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகின்றது.

சுற்றுலாத் துறையின் 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப்பகுதிகளை முழுமையான சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 17 கோடியே 57இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் நுழைவுவாயில் வளைவு, கழிப்பறைகள், நுழைவுச் சீட்டு வழங்குமிடம், உணவகம், படகு தளம், பார்வை மேடை, மசாஜ் செய்யும் இடம், குளியலறைகள், உடை மாற்றும் அறைகள், ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்:

வத்தல்மலைப் பகுதியில் 2 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் நில சீரமைப்பு. வாகன நிறுத்துமிடம், நுழைவு வாயில் வளைவு. உணவகம், வரவேற்பறை, ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்:

நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையை முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்திடும் வகையில் 2 கோடியே 22 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் நுழைவுவாயில் வளைவு, வாகன நிறுத்துமிடம், நடைபாதை, கழிப்பறைகள், சாகச மற்றும் சுற்றுலா வசதிகள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்: திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் 1 கோடியே 47 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் நிலசீரமைப்பு, சாலை மற்றும் நடைபாதை, மின்சாரப் பணிகள், கண்காணிப்பு கேமிராக்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்:

கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் கடற்கரையில் 2 கோடியே 84 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாய் செலவில் பார்வையாளர்கள் மாடம், குழந்தைகள் விளையாடுமிடம், சென்ட்ரல் பிளாசா, நுழைவுச்சீட்டு வழங்குமிடம், தகவல் பலகை, சிற்பங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்:

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்திட 50 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நடைபாதை. நிலச்சீரமைப்பு, படகுதளம், ஆழ்துளை கிணறு. மின்சாரப் பணிகள் போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள்:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஹரித்ராநதி கோயில் குளத்தை மேம்படுத்திட 50 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நடைபாதை, நிலச்சீரமைப்பு, படகுதளம், ஆழ்துளை கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகள் என மொத்தம் 27 கோடியே 34 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி துறை அமைச்சர் . சு. முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி. சந்தரமோகன், சுற்றுலாத் துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

The post ரூ.27 கோடியில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,K. Stalin ,Shri Narendra Fadnavis ,Chennai ,Chief Secretariat ,Antidpalayam ,Lake Antyur ,Okanakal Lake ,Kollimalai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை...