காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட யாத்ரி நிவாஸ் வாகன பார்க்கிங் இடம், குப்பை கழிவுகள் சூழ்ந்து சுகாதார சீர்கேட்டில் உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தென்னிந்தியாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாக, நகரங்களில் சிறந்ததாக சங்க காலத்தில் நகரேஷூ காஞ்சி என்று குறிப்பிடப்பட்ட காஞ்சிபுரத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம், ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா, காமாட்சியம்மன் கோயில் பிரம்மோற்சவம், கைலாசநாதர் கோயில் சிவராத்திரி, குமரகோட்டம் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா, கச்சபேஸ்வரர் கோயில், பிறப்பு முதல் இறப்பு வரை மனிதர்கள் வணங்க வேண்டிய பிறவாதீஸ்வரர், இறவாதீஸ்வரர், தென்னிந்தியாவிலேயே தனியாக கோயில் உள்ள சிறப்பு பெற்ற சித்ரகுப்தர் கோயில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், திரை உலகப் புள்ளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்கள் வழக்குகளில் இருந்து விடுபட நாடிச் செல்லும் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் என ஏராளமான கோயில்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன.
இதனால், காஞ்சிபுரம் நகரம் எப்போதும் வெளியூர் பயணிகள் மற்றும் பக்தர்களால் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக, சுற்றுலாத்துறை ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் மூலம் ₹24.64 கோடி மதிப்பீட்டில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 4,050 சதுர மீட்டர் பரப்பளவில் பார்க்கிங் உடன் கூடிய யாத்ரி நிவாஸ் கட்டும் பணி நடைபெற்றது. பக்தர்கள் வருகை தரும் கார், வேன் என 50 வாகனங்கள் நிறுத்தக் கூடிய அளவில் பெரிய இடவசதியுடன் பார்க்கிங் அமைக்கப்பட்டது. இதனால், வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் சிரமமின்றி தங்குவதுடன், கோயில்களின் அருகில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறைவதுடன், அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் கோயிலுக்கு அதிகளவில் வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த, பார்க்கிங் ஏரியாவில் பஸ்சுக்கு ரூ.300, வேன் ரூ.250, கார் ரூ.200, டூவீலருக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. யாத்ரி நிவாஸ் கட்டிடம் மற்றும் பார்க்கிங் போன்றவற்றை ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகமே பராமரித்து வருகிறது. இதில், சாதாரண நாட்களில் சுமார் 20 வாகனங்களும், தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்களும் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேலும், வரக்கூடிய நாட்களில் வாகனங்கள் அதிகரிக்கும் என அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
The post காஞ்சிபுரத்தில் குப்பை கிடங்காக மாறிய யாத்ரி நிவாஸ் வாகன பார்க்கிங்: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.