×
Saravana Stores

மழை பெய்தும் மண் திட்டுகள் பழையாற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

*கழிவுகள், ஆக்ரமிப்பால் அழியும் பரிதாபம்

நாகர்கோவில் : திருநெல்வேலி தாமிரபரணியை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவது போல், குமரி மாவட்டத்தில் பழையாற்றை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் வற்றாத ஜீவநதியாக விளங்குகிறது பழையாறு.

மகேந்திரகிரி மலையின் வடமேற்கு திசையில் 17.6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளோடு என்னும் இடத்திலிருந்து பழையாறு உற்பத்தியாகிறது. சுருளோடு கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. முறையாக பராமரித்து இருந்தால், குமரியின் சொர்க்கமாக விளங்க வேண்டிய பழையாறு, இப்போது குமரியின் கூவமாக மாறி இருக்கிறது.

ஆகாயதாமரைகள் மண்டியும், கழிவு நீர் கலந்தும் ஆறு நாசமாகி விட்டது. மறுபுறம் ஆக்ரமிப்பாளர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆறு 44 கி.மீ தூரம் ஓடி மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கிறது. பழையாற்றின் மூலம் 16 ஆயிரத்து 550 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்கள் பயனடைகின்றது என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயத்திற்கு மட்டுமின்றி வழியோர கிராமங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் பழையாறு காரணமாக உள்ளது. இந்த ஆற்றை நம்பி பல இடங்களில் குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.

பழையாற்றின் குறுக்கே வீரப்புலி, குட்டை, பள்ளி கொண்டான், சாட்டுப்புதூர், செட்டித்தோப்பு, வீரநாராயணமங்கலம், சபரி, குமரி, சோழந்தட்டை, பிள்ளைப் பெத்தான், மிஷன் உள்ளிட்ட 14 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. தென்தாமரைக்குளம் அருகே தற்போது மேலும் ஒரு புதிய தடுப்பணை கட்டப்படுகிறது. ஏற்கனவே உள்ள தடுப்பணைகள் பல இப்போது உடைந்தும், பெயர்ந்தும் பயனற்ற நிலைக்கு செல்கிறது. ஷட்டர்கள் துருபிடித்து வர்ணம் பூசப்படாமல் காணப்படுகிறது.

பழையாற்றை பாதுகாக்கும் வகையில், பல்வேறு அமைப்புகள் முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டன. ஆனால் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பழையாற்று பாதுகாப்பு என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கழிவுகள் கலப்பதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கையை தொடங்கி உள்ளன. இதே நிலை தான் குமரி மாவட்ட பழையாற்றிலும் உள்ளது. குறிப்பாக நாகர்கோவில் மாநகர பகுதியில் பழையாற்றில் கழிவுகள் கலக்கிறது.

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் கழிவுகள் கலந்து, பழையாறு சாக்கடை போல் காட்சி தருகிறது. மேலும் பழையாற்றில் பல்வேறு படித்துறைகள் உடைந்து கிடக்கின்றன. ஆகாய தாமரைகள், கழிவுகள், ஆக்ரமிப்புகளால் பழையாறு அழிந்து வருகிறது. எனவே பழையாற்றை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நீர் நிலை ஆர்வலர்கள், இது தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவது போல், குமரி மாவட்டத்தில் பழையாற்றை பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும். குமரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது.

பழையாற்றில் தடுப்பணைகள் திறந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை காலத்திலும் தற்போது ஒழுகினசேரி பகுதியில் பழையாறு வறண்டு மண் திட்டுகள் காட்சி தருகின்றன. குப்பைகளும் அங்கு குவிந்து கிடக்கின்றன. நகரின் மைய பகுதியில் ஓடும் ஆற்றின் இந்த பரிதாபகரமான நிலை நீர்நிலை ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.

புதர்களை அகற்ற வேண்டும்

பழையாற்றில் உள்ள சபரி அணை மதகுகள் உடைந்தும், புதர்கள் மண்டியும் கிடக்கிறது. தற்போது மழை காலம் என்பதால், மதகுகள் திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் மதகுகள் புதர் மண்டி கிடப்பதால், தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது. மழை இல்லாத நாட்களில், மதகுகளை அடைத்து புதர்களை மட்டுமாவது பொதுப்பணித்துறை வெட்டி அகற்ற வேண்டும். அப்போது தான் தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்படும் நாட்களில், சீராக வெளியேற முடியும் என விவசாயிகள் கூறி உள்ளனர்.

தூர்வாரும் பணிகள் நடக்கவில்லை

வழக்கமாக கோடையில் நடைபெற வேண்டிய தூர்வாரும் பணிகள், இந்த முறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக நடக்க வில்லை. தமிழ்நாடு அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்தும், அதை பயன்படுத்தாமல் வீணாக்கி விட்டனர். தோவாளை தூவச்சி பகுதியில் கூட, மழை காலத்தில் தான் தூர்வாரும் பணி நடந்தது.

இதனால் சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். புதிய தடுப்பணைகள், கால்வாய்கள் வெட்டி விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டாலும் கூட, இருக்கிற தடுப்பணைகள், கால்வாய்களை பாதுகாத்து வந்தால் தான் இன்னும் சில ஆண்டுகள் விவசாயத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.

The post மழை பெய்தும் மண் திட்டுகள் பழையாற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Parithapam Nagercoil ,Tirunelveli ,Tamiraparani ,Kumari district ,
× RELATED திருக்கழுக்குன்றம் அருகே சோகம் பல்...