×
Saravana Stores

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில், மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் விளங்குகிறது. இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் கரும்பு, நெல், நிலக்கடலை ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, கார்த்திகை பட்டம் தொடங்கியுள்ளதால் நிலக்கடலை பயிர் சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து, பள்ளிப்பட்டு வேளாண்மை உதவி இயக்குநர் தாமோதரன் கூறுகையில், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கார்த்திகை பட்ட பயிர் சாகுபடி தொடங்கியுள்ளது. விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கார்த்திகை மாதத்தில் விதைப்பு செய்வது அதிக மகசூலுக்கு வாய்ப்பை அளிக்கிறது. இந்த மாதத்தில் செய்யும் பயிர் சாகுபடிக்கு சரியான தட்பவெப்ப நிலை, மழை சாதகமாக இருப்பதால் அதிக மகசூல் பெறப்படுகிறது.

இதனால், சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிர் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பச்சைபயிறு, உளுந்து விதைகளை பொறுத்தவரை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. நுண்ணுயிர் ஊட்டச்சத்து, உயிர் உரங்கள் அனைத்தும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. நிலக்கடலை சாகுபடியில் அதிக இடுபொருள் செலவாக இருப்பது விதையே. எனவே, நல்ல தரமான விதையை தேர்வு செய்து விதைப்பு செய்யும் போது உயர் விளைச்சல் பெறலாம். நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை நிலக்கடலையை கட்டாயம் பரிசோதனை செய்த பின்னர் நடவு பணியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

The post பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Skolipat ,
× RELATED தொடக்கப்பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு குறித்து ஆய்வு