சென்னை: தங்கம் விலை ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று திடீரென சவரனுக்கு ரூ.800 குறைந்தது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக உயர்ந்து தினம், தினம் புதிய உச்சத்தை கண்டது. இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 31ம் தேதி ஒரு பவுன் ரூ.59,640க்கு விற்பனையாகி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்னர் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,720 வரை குறைந்தது.
இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்து வந்தது. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. 18ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,960க்கு விற்கப்பட்டது. 19ம் தேதி சவரன் ரூ.56,520, 20ம் தேதி சவரன் ரூ.56,920, 21ம் தேதி சவரன் ரூ.57,160, 22ம் தேதி சவரன் ரூ.57,800 என உயர்ந்து கொண்டே போனது. தொடர்ந்து கடந்த 23ம் தேதி தங்கம் விலை மேலும் உயர்ந்தது.
அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,300க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,400க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து 6 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்தது. தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்திருந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.7,200க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.57,600க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், இந்த திடீர் விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இதனிடையே, வெள்ளியின் விலை தொடர்ந்து 7வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.101க்கும். ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000க்கும் விற்பனையானது.
The post அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை திடீர் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்தது appeared first on Dinakaran.