புதுடெல்லி: ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் உள்ளார். இந்த நிலையில் வழக்கின் பிரதான மனுதாரரான முருகன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘ஆவின் முறைகேடு வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதேவேளையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தை நாடி இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளனர். எனவே முகாந்திரம் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கவும் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி நீதிபதிகள் முன்னிலையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதில், ஆவினில் வேலை வாங்கி தருவது தொடர்பாக பண மோசடி முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்று அனுமதிக்கக் கோரி, மாநில ஆளுநருக்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை விவகாரத்தில் தற்போது வரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
The post ஆவினில் வேலை வாங்கி தருவதாக முறைகேடு அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி ஆளுநருக்கு கடிதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.