* நள்ளிரவுக்குள் புதிய முதல்வர் பதவி ஏற்காவிட்டால் அரசியல் சாசன நெருக்கடி
* பா.ஜவுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சிவசேனா மறுப்பு
* பீகார் மாடலை பின்பற்றி ஷிண்டேவை முதல்வராக்க கோரிக்கை
மும்பை: முதல்வர் பதவியால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியை தேவேந்திர பட்நவிசுக்கு விட்டுக்கொடுக்க ஏக்நாத் ஷிண்டே மறுத்து வருவதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய நெருக்கடி உருவாகி உள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜ 132, சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களைப் பிடித்தன. உத்தவ் தலைமையிலான ஒன்றுபட்ட சிவசேனாவை பிளவுபடுத்தியதால் பாஜ கூட்டணி அரசில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
அதே போல் தேசியவாத காங்கிரசை பிளவுபடுத்திய அஜித்பவாருக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டது. பா.ஜ சார்பில் பட்நவிஸ் துணை முதல்வராக இருந்தார். ஆனால் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ பிரமாண்ட வெற்றி பெற்று இருப்பதால் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. ஆனால் முதல்வர் பதவியை பீகார் மாடல் அடிப்படையில் மீண்டும் தங்களுக்கு தர வலியுறுத்தி ஏக்நாத் ஷிண்டே நெருக்கடி கொடுத்து வந்தார். இதற்கிடையே மகாராஷ்டிரா புதிய முதல்வராக தேவேந்திர பட்நவிசை தேர்வு செய்வது எனவும், ஏக்நாத்ஷிண்டே மற்றும் அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது எனவும் பாஜ மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதல்வருடன் சேர்த்து 43 அமைச்சர்கள் வரை நியமிக்கலாம். இதில் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு 12 அமைச்சர்கள் பதவிகளும் தேசியவாத காங்கிரசுக்கு 10 அமைச்சர் பதவிகளும் தரப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 132 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜ 21 அமைச்சர் பதவிகளை வைத்துக் கொள்ளும் எனவும், உள்துறை, நிதி, வருவாய் துறை, நகர்ப்புற மேம்பாடு போன்ற முக்கிய துறைகள் பாஜ வசமே வைத்துக் கொள்ளும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று மும்பையில் நடந்த சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய தலைவராக ஷிண்டே தேர்வு செய்யப்பட்டார்.
சிவசேனா செய்தித் தொடர்பாளர் நரேஷ் மஸ்கே கூறுகையில்,’ பீகார் மாடலை பின்பற்றி ஏக்நாத் ஷிண்டே முதல்வராக தொடர வேண்டும்.பீகாரில் பாஜ எம்எல்ஏக்கள் எண்ணிக்கையைப் பார்க்காமல், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ்குமாரை முதல்வராக்கியது போல், மகாராஷ்ராவிலும் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக நீடிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ கூட்டணியின் மூத்த தலைவர்கள் இறுதி முடிவெடுப்பார்கள். ஏனெனில் மகாராஷ்டிராவில் ஷிண்டே, பட்நவிஸ், அஜித் பவார் தலைமையில் தான் தேர்தல் நடந்தது. இந்தகூட்டணியின் தலைமை மதிக்கப்பட வேண்டும் என்பதை காட்டுகிறது’ என்றார்.
தற்போது மகாராஷ்டிரா அமைச்சராக உள்ள தீபக் கேசர்கர் கூறுகையில்,’ சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே பதவியில் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏனெனில் அவரது தலைமையில் பா.ஜ கூட்டணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றது’ என்றார். ஆனால் பா.ஜ மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராவ்சாஹேப் தன்வே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில்,’தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரை, அந்த கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவராக தேர்ந்தெடுத்தது ேபால் சிவசேனாவும் அதன் தலைவராக ஷிண்டேவைத் தேர்ந்தெடுத்தது.
பாஜ விரைவில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி சட்டப்பேரவைக்குழு தலைவரை தேர்வு செய்யும். பாஜ முதல்வர் பதவியை விரும்புகிறது என்பது வெளிப்படையானது. உள்கட்சி பேச்சுவார்த்தைக்கு பிறகு இறுதி முடிவு மத்திய தலைமைக்கு தெரிவிக்கப்படும்’ என்றார். பாஜ எம்எல்சி பிரவின் தரேகர் கூறுகையில்,’ முதல்வர் பதவிக்கு தேவேந்திர பட்நவிஸ்தான் சரி’ என்றார். இதனால் பா.ஜ மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இடையே முதல்வர் பதவி தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே இன்று நள்ளிரவு 12 மணிக்குள் புதிய அரசை அமைக்க வேண்டிய சூழல் பா.ஜ கூட்டணிக்கு உருவாகி உள்ளது. இல்லாவிட்டால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அரசியல் சாசன நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் 14வது மாநில சட்டசபையின் பதவிக்காலம் முடிவடையும் இன்று நள்ளிரவுக்குள் புதிய அரசு அமையாவிட்டால் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வரலாம் என்ற செய்தியை சட்டப்பேரவை அதிகாரி ஒருவர் நிராகரித்தார்.
அவர் கூறுகையில்,’ இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணனிடம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பெயர்கள் அடங்கிய அரசிதழின் நகல்களை சமர்ப்பித்துவிட்டதால் 15 வது சட்டப்பேரவை தற்போது நடைமுறையில் உள்ளதாக கருதப்படும். எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 73வது பிரிவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த அறிவிப்பைச் சமர்ப்பித்த பிறகு, அவை முறையாக அமைக்கப்பட்டதாகக் கருதப்படும்’ என்றார்.
இந்த கருத்தை முன்னாள் மக்களவை செயலாளரும், மூத்த அரசியல்சாசன நிபுணருமான பிடிடி ஆச்சாரி நிராகரித்தார். அவர் கூறுகையில்,’ மகாராஷ்டிராசட்டப்பேரவை பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. புதிய சட்டப்பேரவைக்கான எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குறைந்தபட்சம் இன்று நள்ளிரவு 12 மணிக்குள் புதிதாக முதல்வர் மட்டுமாவது பதவி ஏற்றால் தான் புதிய அரசு அமைந்ததாக கருதப்படும். இன்று நள்ளிரவுக்குள் புதிய முதல்வர் பதவி ஏற்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சியை நிச்சயம் அமல்படுத்த வேண்டும். இதைத்தான் அரசியல்சாசனம் கூறுகிறது’ என்றார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
* கார்கேவுடன் காங்.தலைவர் சந்திப்பு
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 101 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி முன்எப்போதும் இல்லாத அளவுக்கு வெறும் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நானா பட்டோலே ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து பட்டோலே பேசினார். ஆனால் அவர் பதவியை ராஜினாமா செய்ததாக வந்த தகவலை மறுத்தார். நான்டெட் எம்பி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அந்த தொகுதியில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் வருகிறது. இதில் ஒன்றில் கூட காங்கிரஸ் கூட்டணி வெல்லாதது குறித்தும் பட்டோலே கேள்வி எழுப்பினார்.
* டெல்லியில் ஆலோசனை
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர்கள் பட்நவிஸ், அஜித் பவார் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு முதல்வர் பதவிக்கான முட்டுக்கட்டையை தீர்க்க பாஜ தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
* மகாராஷ்டிராவில் உள்ள 29 எஸ்சி தொகுதியில் 21 தொகுதியிலும், 24 எஸ்டி தொகுதியில் 21 தொகுதியிலும் பா.ஜ கூட்டணி வென்றுள்ளது.
* சிவசேனா உத்தவ் பிரிவு சட்டப்பேரவை தலைவராக ஆதித்யா தாக்கரே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* கோல்காபூர் மாவட்டம் சாந்த்காட் தொகுதியில் வென்ற சுயேட்சை எம்எல்ஏ சிவாஜி பட்டேல், பா.ஜவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
* ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா 125 தொகுதியில் போட்டியிட்டு 1.8 சதவீத வாக்கு மட்டுமே பெற்றுள்ளதால் கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.
The post சட்டப்பேரவை பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால் சிக்கல் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்? appeared first on Dinakaran.