மகர ராசிக் குழந்தைகள், சிறு பருவத்திலேயே அவர்கள் பெரியவர்களைப் போல நடந்து கொள்வார்கள். பெரியவர்களோடுதான் எந்நேரமும் இருக்க விரும்புவர். தன் வயதுடையவர்களுடன் வெளியே சென்று விளையாடுவதோ, அடிபிடி சண்டை போடுவதோ, இவர்களிடம் பார்க்க இயலாது. எப்போதும் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் பேசுவதை வாய் பார்த்துக் கொண்டே இருப்பர்.
ஞானமும் கல்வியும்
மகர ராசி சிறுவர்கள் சனி ராசியினர் என்பதால், பிறவி ஞானம் உள்ளவர்கள். எனவே இச்சிறுவர்களுக்குப் படிப்பு ஒரு பொருட்டு கிடையாது. அதிக பிரயத்தனம் இன்றி தங்களுடைய பாடங்களை விரைவில் படித்துவிடுவார்கள். வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டுத்தான் வேறு எந்த வேலையும் பார்ப்பார்கள். வீட்டுக்கு வந்தவுடன் தங்கள் புத்தகங்களை எடுத்து வைத்து பள்ளியில் கொடுத்த வேலைகளை எல்லாம் செய்து முடித்து விட்டுத்தான், இந்தக் குழந்தைகள் விளையாட வெளியே வரும்.
லட்சியமும் உழைப்பும்
மகரராசி சிறுவர்கள், சிறு வயதிலிருந்து தனக்கென்று ஒரு லட்சியமும், அதனை அடைவதற்கான திட்டங்களும் கடின உழைப்பும் உடையவர்களாகவே வளர்ந்துவருவார்கள். எந்த வேலை செய்தாலும் அதைத் திருத்தமாகவும் செம்மையாகவும் செய்து முடிப்பதே இவர்களின் பழக்கம். சிறுவயதிலேயே இவர்களின் அறை, நோட்டுப் புத்தகம், உடை ஆகியவை அழகாகவும் செம்மையாகவும் இருக்கும். ஒரு கட்டுரையை எழுதினாலும் அல்லது அறிவியல் படம் வரைந்தாலும் கலர் பென்சில்களைப் பயன்படுத்துவது, ஒற்றைக்கோடு, இரட்டை கோடு வரைதல், தெளிவான கையெழுத்து மற்றும் நேர்த்தியாக அந்த கட்டுரையை அமைத்திருப்பார்கள். இவர்களின் நோட்டுப் புத்தகங்கள் கண்ணில் ஒத்திக் கொள்வது போல இருக்கும்.
இளையவரும் முதியவரும்
மகர ராசி சிறுவர்கள், இளம் வயதிலேயே முதியவர்களைப் போல நடந்து கொள்வார்கள். சிறு பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவது, ஊர் சுற்றுவது, அரட்டை அடிப்பது இவர்களுக்குப் பிடிக்காது. அப்படி ஒரு இடத்தில் இவர்கள் இருக்க நேர்ந்தால், இவர்கள் அங்கு தலைமைப் பொறுப்பேற்று மற்றவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருப்பர்.
நட்பு வட்டம்
மகர ராசிச் சிறுவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவரை நண்பராக வைத்திருப்பார். அந்த நண்பரிடம் நிறைய ரகசியங்களை பகிர்ந்து விட்டோம் என்ற அச்சம் ஏற்படும் வேளையில், அவரை மெல்ல கழட்டி விட்டு விடுவார். எனவே இவர்களுக்கென்று நிரந்தர நண்பர்களோ பகைவர்களோ பள்ளி கல்லூரி வகுப்புகளிலும் பின்பு வேலை பார்க்கும் இடங்களிலும் இருப்பதில்லை.
நுண்கலை நாட்டம்
மகர ராசி சிறுவர்களுக்கு பெரும்பாலும் நடனத்தில் நாட்டம் கிடையாது. அது உடலை வருத்தி ஆட வேண்டும். ஓடியாடும் விளையாட்டிலும் விருப்பம் இருக்காது. ஆனால், படம் வரைவது, பாட்டு கேட்பது, கவிதை கதை எழுதுவது, போட்டோ எடுப்பது, மேடையில் பேசுவது, நடிப்பது போன்றவற்றில் அதிக ஆசையும் திறமையும் இருக்கும். பள்ளிப் பருவம் முதல் கொண்டு இவர்களே கதை வசனம் நாடகம் இயக்கம் போன்றவற்றில் ஈடுபடுவர்.
மௌனச் சாமியார்
மகர ராசி சிறுவர்கள் வகுப்பில் அதிகம் பேச மாட்டார்கள். மிக அரிதாக ஓர் இருவரோடு ஒரு சில வாக்கியங்கள் மட்டுமே பேசுவர். ஆசிரியர் கேள்வி கேட்டாலும் முந்திரிக் கொட்டை போல் எழுந்து பதில் சொல்லமாட்டார். இச்சிறுவனுக்கு பதில் தெரிந்தாலும் சொல்ல மாட்டான். இருக்கிற இடம் தெரியாமல் இருக்கும் இவர்கள் திடீரென்று ஒரு நாள் வகுப்பின் லீடராக அல்லது பள்ளிக்கூடத்தின் மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவர். இவருடைய நோக்கம் அதுதான். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் முன்பாகவே ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்திருப்பான்.
இலக்கு நோக்கிய பயணம்
மகர ராசிக் குழந்தை பிறந்ததிலிருந்து திட்டமிடுதலும், தன் தேவையை நிறைவேற்றுதலும் என்ற தண்டவாளத்தில் தன் வாழ்க்கைப் பயணத்தைச் சிறிதும் பிசகாமல் நடத்தும். சிறுவயதிலிருந்தே தனக்கு அதிக மரியாதையும் அதிகாரமும் வேண்டும் என்பதை இச்சிறுவர்களும் மாணவர்களும் எதிர்பார்ப்பார்கள். இக்குழந்தை தனிமை விரும்பியாக தனியாகவும் அமைதியாகவும் இருந்து வாழ்வில் முதல் இடத்தைப் பிடித்துவிடும்.
எதிர்பாலின ஈர்ப்பு
எதிர்பாலினம் மீது அதிக ஈர்ப்புக் கொண்ட மகர ராசி மாணவர்களுக்கு அவர்களோடு கலகலப்பாக உட்கார்ந்து பேசுவது இயலாத செயல். அவர்களைப் பார்த்த உடனேயே வெட்கம் வந்து உச்சத்தில் நிற்கும். அதனால் வெட்கப்பட்டு கொண்டு வெகு தூரத்தில் நின்று பார்த்து ரசிப்பார்களே தவிர, அருகில் உட்கார்ந்து இயல்பாக பேசிச் சிரித்து மகிழத் தயங்குபவர். மகர ராசி மாணவர்கள் பள்ளியில் கல்லூரியில் நிறைய பேரிடம் காதல் வயப்பட்டு இருந்தாலும், யாரிடமும் அதை வெளிப்படுத்துவது கிடையாது. இவர்களில் பலர் வளர்ந்த பின்பு காதல் திருமணம் செய்வர்.
பெரிய குடும்பம்
பிறவியிலேயே தலைமைத்துவ பண்பு கொண்ட மகர ராசிக் குழந்தைகள், தங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை அல்லது படித்து முடிக்க வேண்டிய பாடம் என்று எடுத்துக் கொண்டால் அடிமைக்கும் அடிமையாய் இருந்து அந்த வேலைகளை செய்து முடிப்பார்கள். வேலை செய்யும் போது சொகுசு எதிர்பார்ப்பதில்லை. ஆனால், அந்த வேலையை முடித்துவிட்ட பிறகு தங்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மிகுந்த பொறுப்புணர்ச்சி உடைய இவர்கள் தன் குடும்பத்தார் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் எல்லோரையும் அரவணைத்து அன்பு காட்டுவதால் இவர்களின் குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும். எல்லா சொந்தக்காரர்களுக்கும் தகுந்த அன்பும் மரியாதையும் காட்டி அவர்களின் பெருமதிப்பை பெற்று விடுவார்கள். அவரவருக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து சொந்தக்காரர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வார்கள். மற்றவர்கள் இச்சிறுவனைத் தன் சொந்தம் என்றும் நண்பர் என்றும் சொல்வதுண்டு. ஆனால் மகர ராசி குழந்தை அவர்களை தங்கள் சொந்தம் என்றோ நண்பர் என்றோ சொல்லாது. அந்த உரிமையும் எடுத்துக் கொள்ளாது. தாமரை இலை தண்ணீர் போல இவ்வுலக வாழ்வில் பற்றற்று விளங்கும் 200, 300 வயது உடைய துறவி என்று மகர ராசிக் குழந்தையைக் குறிப்பிடலாம்.
The post மகர ராசிக் குழந்தை மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது!! appeared first on Dinakaran.