×
Saravana Stores

குடும்பங்களை காப்பாற்றும் காலபைரவர்

எட்டு என்றால் கஷ்டமா?

பொதுவாகவே எட்டு என்கிற எண் கஷ்டத்தைத் தருகின்ற எண்ணாக நாம் கருதுகின்றோம். அஷ்டமி திதியில் எந்த சுப காரியங்களும் செய்யப்படுவது இல்லை. ஆனால் ஆன்றோர்கள் இந்த அஷ்டமி திதியை புனித நாளாகக் கருதுகின்றனர். எட்டு என்பது உண்மையில் மிகச்சிறந்த எண். எட்டாததையும் எட்ட வைக்கும் எண். ஆன்மிகத்தில் மிக உயர்ந்த எண். மகாலட்சுமி எட்டு தோற்றங்களில் காட்சியளிப்பதால் அஷ்ட லட்சுமி என்று சொல்லுகின்றோம். செல்வங்களை அஷ்ட ஐஸ்வரியங்கள் என்று சொல்லுகின்றோம். சித்திகளை அஷ்ட மகா சித்திகள் என்று சொல்லுகின்றோம். எனவே ஆன்மிகத்தில் மிக உயர்ந்த இடத்தை பிடித்த அஷ்டமி திதியில் இறைவனை வணங்குவதன் மூலமாகவும் விரதம் இருப்பதன் மூலமாகவும் நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்.

ஆயுள் விருத்தி ஏற்பட சம்புகாஷ்டமி

ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சனாதன அஷ்டமி விரதம் இருந்தால் நவகிரக தோஷம் விலகும். வறுமை போகும். சதாசிவ அஷ்டமியில் விரதம் இருந்தால் மனக்குழப்பங்கள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பகவதாஷ்டமி விரதம் இருந்தால் கடன் சுமை நீங்கிவிடும். சிவனடியார்களுக்கு செய்த பாவங்கள் போய் விடும். நீலகண்டாஷ்டமி விரதம் இருந்தால் எல்லாத் துறைகளிலும் நிலையான வெற்றி கிடைக்கும். கல்வி கேள்விகளில் முன்னேற்றம் ஏற்படும். அதிகஸ்தானு அஷ்டமி விரதம் சகல ஐஸ்வரியங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். ஸ்தாணு அஷ்டமியால் விஷபயம் நீங்கும். சம்புகாஷ்டமி விரதம் இருந்தால் ஆயுள் தோஷங்கள் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும். பெற்றோர்களுக்கு செய்த அபவா தங்கள் நீங்கிவிடும்.

பைரவர் யார்?

சிவபெருமான் உருவத்திலும், அருவத்திலும், அருஉருவத்திலும் காட்சி தருவார். இதனை அருவம், உருவம், அருவுருவம் என்றும், பலவாறாக சைவர்கள் அழைக்கின்றனர். அவருடைய திருமேனி வடிவங்கள் 64 என்பர். 64 திருமேனி வடிவங்களில் ஒன்று வைரவர் எனப்படும் பைரவர். ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். கால பைரவர் ஆக உலகைக் காக்கிறார். காலாக்கினி பைரவராக உலகை பிரளய காலத்தில் ஒடுக்குகின்றார். சிவனுக்கு ரிஷப வாஹனம் இருப்பது போல பைரவருடைய வாகனமாக நாய் அமைந்திருக்கிறது. அதனால் நாய்களுக்கு பைரவர் என்ற பெயர் உண்டு.

அட்ட பைரவர்கள்

அட்ட பைரவர்கள் என்பவர்கள் எண் திசைகளுக்கு ஒன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் ஆவார். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.
யார் யார் இந்த பைரவர்கள். அவர்கள் பெயர் என்னென்ன…

1. அசிதாங்க பைரவர்
2. ருரு பைரவர்
3. சண்ட பைரவர்
4. குரோதன பைரவர்
5. உன்மத்த பைரவர்
6. கபால பைரவர்
7. பீக்ஷன பைரவர்
8. சம்ஹார பைரவர்
சிவனுக்கு அட்ட வீரட்ட தலங்கள் உண்டு. அதைப்போல அஷ்ட பைரவ தலங்களும் தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி அருகில் உண்டு.

நாய் வாஹனம்

நம்முடைய சமய மரபில் ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு வாகனம் இருக்கிறது. அநேகமாக உலகத்தில் உள்ள அத்தனை உயிருள்ள, உயிரற்ற பொருள்களையும் (சர, அசர) இறைவன் அன்போடு நேசிக்கிறான் என்பதைக் குறிக்கும் தத்துவம் தான் இந்த வாகனத் தத்துவம். சிறிய உருவமான எலி (மூஞ்சூறு) தொடங்கி மிகப்பெரிய உருவமான யானை வரை பல்வேறு பிராணிகளும் இறைவனுக்கு வாகனமாக அமைந்திருக்கின்றன. மனித ரல்லாத பூத வாகனமும் உண்டு. இயற்கை ஒளிகளான சந்திர சூரியர்கள் (சந்திர பிரபை, சூரிய பிரபை) கூட வாஹனம் தான். ஏன் தாவர இனமான கற்பக விருட்சம் கூட (இறைவனுக்கு வாகனமாக இருப்பதை பார்க்கின்றோம். ஆனால் கால பைரவருக்கு நாய் வாகனமாக இருக்கிறது.

நரசிம்ம மூர்த்தியும் பைரவரும்

உக்கிரமாக இருக்கின்ற பொழுது உக்கிர நரசிம்மர் என்று அழைப்பது போலவே பைரவரின் உக்கிர தோற்றத்தை வைத்து உக்கிர பைரவர் என்று அழைப்பார்கள். அதே சமயம் யோகிகளுக்கு ஞானத்தைத் தருவதால் நரசிம்மரை யோக நரசிம்மர் என்று அழைப்பது போலவே, பைரவரையும் யோக பைரவர் என்ற நிலையில் பார்ப்பதும் உண்டு. பஞ்சபூதங்களையும் காப்பவராக விளக்குவதால் பூத பைரவர் என்றும் அவரைச் சொல்லுவார்கள். தட்சணாமூர்த்தியை போல ஞானத்தை அன்பர்களுக்கு அள்ளி அள்ளி வழங்குவதால் ஞானபைரவர் என்றும் அழைப்பது உண்டு. எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, சகல ஐஸ்வரியங்களையும் வாரி வாரிக் கொடுக்கும் வல்லமை பெற்றவர் பைரவர். பைரவர் தோற்றத்தைப் பற்றி சைவம் அல்லாத பிற சமயங்களான ஜயினம் பௌத்தம் சாத்த கௌமா ரங்களிலும் செய்திகள் உண்டு.

பாவங்கள் தீர்க்கும் கார்த்திகை அஷ்டமி

இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமன வேளையில் பைரவரையும் சென்று வழிபட வேண்டும். அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும். இப்படி தரிசனம் செய்வதன் மூலமாக நமக்கு மிகச்சிறந்த நன்மைகள் கிடைக்கும். சனியினுடைய தோஷங்கள் விலகும். ஆயுள் தோஷங்களும் விலகும். ஆயுள் விருத்தி உண்டாகும். சுபகாரியத் தடைகள் தூள் தூளாகும். கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை கால பைரவ அஷ்டமி என்று அழைக்கின்றோம். காலா பைரவ அஷ்டமி, பாவங்களை எல்லாம் தீர்ந்து விடும்.

எந்த போட்டிகளிலும் வெற்றி பெறலாம்

ஈஸ்வராஷ்டமி விரதம் இருந்தால் சகோதர பகை நீங்கும். கைலாச பதவி கிடைக்கும். ருத்ராஷ்டமி விரதம் பொருள் வரவைத் தரும் வறுமையைப் போக்கும். கால பைரவ அஷ்டமி கோபத்தைக் கட்டுப்படுத்தும். கோபத்தினால் ஏற்படும் பாவங்களை விலக்கும். சங்கராஷ்டமி விரதம் இருந்தால் தொழில் விருத்தி ஏற்படும். தொழில் பகை விலகும். தொழில் செய்யும்போது ஏற்படும் பாவங்கள் போய்விடும். தேவ தேவாஷ்டமி விரதமிருந்தால் மனதில் அச்சமே இருக்காது. கால(ன்)பயம் விலகும். உத்தியோகத்தில் பதவி சம்பளம் முதலியவை ஓங்கும். மகேஸ்வராஷ்டமி விரதம் இருந்தால் எந்த போட்டிகளிலும் வெற்றி பெறலாம். முன்னேற்றம் ஏற்படும். திரியம்பகாஷ்டமி விரதம் இருந்தால் குடும்பத்தில் ஏற்படும் சுபத் தடைகளை விலக்கும். திருமண யோகம் கூடிவரும். எம பயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும். இந்நாள்களில் காலை சிவ துதியைச் சொல்ல வேண்டும். மாலை சூரியன் அஸ்தமனமாகும் வேளையில் காலபைரவரை தரிசனம் செய்ய வேண்டும்.

கால பைரவாஷ்டமி என்ன செய்ய வேண்டும்?

காலபைரவாஷ்டமி நாளில் சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளில் கலந்து கொண்டால் மன அழுத்தம், பயம் நீங்கி, தைரியமும் தன்னம்பிக்கையும், வீரியமும் வேகமும், உண்டாகி, சகல சௌபாக்கியங்களும் அடைவார்கள். சிவபெருமான் அபிசேகப்பிரியன். சிவ அம்சம் பைரவர் என்பதால், கால பைரவருக்கு சந்தன அபிஷேகம் சிறப்பானது. உக்கிர மூர்த்தியான இவரின் கோபம் தணிக்க சந்தனம் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பார்கள். கருப்பு அல்லது சிவப்பு வஸ்திரம் சாத்தி, சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். மிளகு தீபமும் நல்லெண்ணெய் தீபமும் சிறப்பானது.

பைரவரே காவலர்

பொதுவாகவே ஒரு ஊர் இருந்தால் அதற்கு ஒரு காவல் தெய்வம் இருக்கும். அதைப்போலவே ஒரு திருக்கோயில் இருந்தால் அந்தத் திருக்கோயிலைக் காப்பதற்கு ஒரு காவல் தெய்வம் இருக்கும். ஆறு, குளம், கடல், ஏரி முதலிய தீர்த்தங்கள் பொங்கி பிரவகித்து நாட்டை அழித்து விடாமல் காப்பதற்காக ஒரு காவல் தெய்வம் உண்டு. இப்படி இயற்கையின் சீற்றத்தை அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொண்டு, ஊரையும் திருத்தலங்களையும், தீர்த்தங்களையும் காப்பதால் இவருக்கு ஊர்க்காவலர் என்றும் தீர்த்த காவலர் என்றும் திருத்தல காவலர் என்றும் அழைப்பதுண்டு. வடவழியில் தீர்த்த பாலகர், ஷேத்திரபாலகர் முதலிய சொற்களாலும் இவர் குறிப்பிடப்படுவது உண்டு.

காசியில் பைரவர்

தீபம் என்றால் திருவண்ணாமலை ஞாபகத்துக்கு வருவது போல, பைரவர் என்றாரே நமக்கு நினைவுக்கு வருவது காசி. காசியில் உள்ள மிகப் பழமையான சிவன் கோயில் காசி கால பைரவர் கோயில். ‘‘கால’’ என்ற சொல் மரணத்தையும் விதியையும் குறிக்கிறது. கால பைரவரைக் கண்டு விதியும் அஞ்சும். மரணமும் நெருங்காது. காசியில் உள்ள கால பைரவர் கோயிலின் வைரவ தரிசனம் அருமையாக இருக்கும். வெள்ளி முகம் கொண்ட காலபைரவர் மிக விரிந்த கண்களுடனும், பெரிய மீசையுடனும், முழங்கால் அளவு நீண்ட கரங்களுடனும் காட்சி அளிப்பார். கண்களில் உக்கிரமும் கருணையும் ஏக காலத்தில் பிரதிபலிக்கும். அவருக்கு அருகிலே அவரது வாகனமாக நாய் இருக்கும். இதே கோயிலின் பின் பகுதியில் சேத்திரபால பைரவர் தரிசனம் கிடைக்கும். ஒருவர் காசியில் வாழ வேண்டும் என்றார் இவருடைய அனுமதி வேண்டும். காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி, பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்தபோது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசிமாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். காசிமாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை பாதுகாக்கின்றனர்.

The post குடும்பங்களை காப்பாற்றும் காலபைரவர் appeared first on Dinakaran.

Tags : Kalabhairava ,Ashtami ,Tithi ,Ashtami Tithi ,
× RELATED இந்த வார விசேஷங்கள்