பரிகாரம் செய்கிறோம். சில நேரம் பலிக்கிறது. சில நேரம் பலிப்பதில்லை. ஏன் பலிக்கவில்லை என்று குழம்புகின்றோம். வேறு ஜோசியரிடம் சென்று, அவர் சொல்லும் பரிகாரத்தைச் செய்யத் தொடங்குகின்றோம். பரிகாரங்கள் முடிவில்லாமல் தொடர்ந்தாலும் பிரச்னைக்கு முடிவு கிடைக்காமல் தடுமாறுகிறோம்.
என்ன காரணம்?
முதலில் ஒரு பரிகாரம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அது மனோபலத்தையும் உடல் பலத்தையும் கூட்டுகின்றது. புத்தியைத் தெளிவாக்குகின்றது. அதனால் சக்தி கூடுகின்றது. முறையாகவும் சிறப்பாகவும் செயல்களைச் செய்யும் ஆற்றலைத் தருகிறது. ஆத்ம பலத்தையும் அதிகரித்து, எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் மனப்பான்மையைத் தருகிறது. இந்த பரிகாரம் நமக்குத் தோஷத்தை நீக்கி நன்மையைத் தரும் என்ற உணர்வை உண்டாக்குகின்றது. அதனால்தான் பரிகாரத்தைச் சொல்லும் பொழுது அழுத்தமாகச் சொல்லுவார்கள்.‘‘நம்பிக்கையோடு செய்யுங்கள் நிச்சயம் நன்மை கிடைக்கும்’’ என்பார்கள். பரிகாரம் செய்வதில் TRUST (நம்பிக்கை) இருக்க வேண்டும் RUST (அவநம்பிக்கை) இருக்கக்கூடாது. செய்யும் நாளும் முக்கியம்.
என்னிடம் ஒரு அன்பர் ஒரு முறை கேட்டார். “பெரும்பாலான பரிகாரங்கள் அமாவாசை தினங்களில் செய்யச் சொல்கிறார்கள் இதற்கு பிரத்தியேகமான காரணம் ஏதாவது இருக்கிறதா?” நான் சொன்னேன், அமாவாசை என்பது அற்புதமான நாள். உண்மையில் ஒரு செயலின் வெற்றிக்கு அடித்தளமாக அமைகின்ற அந்த நாளில், நாம் நம்முடைய முன்னோர்களுக்கு சில தர்ப்பணம் கொடுத்து, மாலை கோயிலில் இறைவனையும் இறைவியையும் வணங்கிவிட்டு வந்தால் அதுவே பெரிய பரிகாரம். இதனால் ஜாதகத்தில் உள்ள பெரும்பாலான குற்றங்கள் நீங்கி அவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும்.
அமாவாசையில் பரிகார பூஜை செய்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் இணைகின்ற நாள். சாஸ்திரத்தில் சூரியனை ஆத்ம காரகன் என்பார்கள் சூரியனை சாட்சியாக வைத்துக்கொண்டுதான் எந்த காரியங்களும் நாம் செய்கின்றோம். நாம் செய்த நல்லது கெட்டது அனைத்திற்கும் சூரியனும் சந்திரனும் சாட்சியாக இருக்கின்றார்கள் இரண்டும் ஒளிக் கிரகங்கள். ஆத்ம காரகன், மனோகாரகன் (உடல் காரகன்) சேர்த்து இருக்கிற நாள் அமாவாசை. உடல் பலம், ஆத்ம பலம் ஒன்றாக பலம் கூடிய நாளாக அமாவாசை விளங்குவதால், பிராயசித்தம் செய்யும் பொழுது இந்த மூன்றும் இயல்பாக இணைந்த நாளாக அமைந்து விடுகிறது. எனவேதான் அமாவாசை நாளை மிகச் சிறப்பான நாளாக சொல்லுகின்றார்கள்.
மகாபாரதத்தில் துரியோதனன் தனது வெற்றிக்கு பூஜை செய்ய வேண்டும் களபலி தரவேண்டும். அதற்கு ஒரு நல்ல நாளைக் குறித்துக் கொடுக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் வல்லவனான சகாதேவனிடம் போய் கேட்கின்றான். சகாதேவன் குறித்துக் கொடுத்த நாள் அமாவாசை. அந்த நாளில் முறைப்படி களபலி தந்து அடிப்படை பூஜையைச் செய்து விட்டால் துரியோதனனுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இதை பின்னால் கண்ணன் மாற்றுகின்றார். இதிலே மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது ஜோதிட சாஸ்திரத்தை கண்ணன் மாற்றிவிட்டான் என்பதல்ல. அமாவாசையில்தான் களபலி தரவேண்டும் என்பதில் கண்ணனுக்கும் சாஸ்திர உடன்பாடுதான். ஆனால், அவன் அதற்கு முதல் நாளே அமாவாசை என்கின்ற தோற்றத்தை ஏற்படுத்தி, சூரிய சந்திரர்களை வரவழைத்து இணைத்து, நீத்தார் கடன்களை செய்யத் தொடங்கி, அவனைப் பார்த்து மற்றவர்களும் செய்ய, அதை நம்பி அசல் அமாவாசைக்கு முதல் நாளே தனது பூஜையை முடிக்கிறான் துரியோதனன்.
துரியோதனனை நம்ப வைத்து உருவாக்கப்பட்ட அமாவாசை தினத்தில் (இந்த அமாவாசையை போதாயன அமாவாசை என்கிறார்கள்) களபலி கொடுக்க, சரியான நாளில் பாண்டவர்கள் அதே களபலி கொடுத்து வெற்றியை அடைகின்றார்கள். எனவே அமாவாசை என்பது அற்புதமான நாள். பெரும்பாலான கோயில்களில் அமாவாசையில் சிறப்பான பூஜைகள் நடைபெறும். கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இத்தல இறைவன் சிதம்பரேஸ்வரர், இறைவி சிவகாமசுந்தரி அம்பாள். இந்த ஆலயத்தில் பஞ்சமுக மகாமங்கள பிரத்யங்கிராதேவி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இங்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தில் காலை 10.30 மணி முதல் பகல் 2 மணி வரை ‘நிகும்பலா மகா யாகம்” என்னும் ‘மிளகாய் ஹோமம்’ நடைபெற்று வருகிறது. எவ்வளவு மிளகாய் கொட்டினாலும் நெடி வராது என்பது இந்த யாகத்தின் சிறப்பாக உள்ளது. இதே போல் பௌர்ணமி தினத்தில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொண்டால் 16 வகையான பேறுகளையும் பெறலாம் என்கிறார்கள். பௌர்ணமி அன்று காலை 11.30 மணி முதல் பகல் 2 மணி வரை யாகம் நடைபெறும். இவையெல்லாம் அமாவாசை பரிகார பூஜைக்கு சான்றுகள்.
பொதுவாகவே பரிகாரம் பலிக்க வேண்டும் என்று சொன்னால் அந்த ஜாதகத்தில் சந்திரனுடைய நிலையும் சூரியனுடைய நிலையும் நன்றாக இருக்க வேண்டும். குறிப்பாக சந்திரனுடைய நிலை நல்ல படியாக இருக்க வேண்டும் அல்லது நல்லபடியாக இருக்கக்கூடிய நாளிலே அந்த பரிகாரத்தைச் செய்ய வேண்டும் அதனால்தான் நாள் பார்த்து பரிகாரம் செய்கின்றார்கள் அந்த நாள் பொதுவான நாள் அல்ல. ஒவ்வொரு தனி ஜாதகத்திற்கும் அந்த நாள் மாறும்.பரிகாரத்தைச் செய்யும்பொழுது மனம் ஒன்றிச் செய்யவேண்டும். மனதில் உறுதியும் நம்பிக்கையும் வேண்டும். குறிப்பிட்ட பிரச்னையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று மனம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனால்தான் முறையாக பரிகாரம் செய்பவர்கள், வேத மந்திரம் சொல்லி, சங்கல்பம் செய்கின்றார்கள். நாம் சங்கல்பம் செய்யும் பொழுது கவனமில்லாமல் இருக்கின்றோம். இந்தக் காரியத்திற்காக இதை நான் உறுதியோடு செய்கின்றேன் என்று அந்த சங்கல்ப மந்திரத்தில் வரும். அதனால்தான் உங்களுக்கு பரிகாரம் சொல்லுகின்ற பொழுது,
அந்த கோயிலுக்குச் சென்று பெயர், ராசி நட்சத்திரம் சொல்லி சங்கல்பம் செய்து பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லுகின்றார்கள்.பரிகாரத்துக்குரிய நாளாக சந்திரனும் சூரியனும் சேர்ந்து இருக்கக் கூடிய அமாவாசை நாளையோ, சூரியனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் எதிராக இருக்கக்கூடிய பௌர்ணமி நாளையோ தேர்ந்தெடுக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக, சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கின்ற பொழுது சந்திரன் ஒளி இழந்த நிலை என்று கருதிவிடக்கூடாது. நமக்குத்தான் அவர் மறைந்திருக்கின்றார். ஆனால் அவர் எந்த ஒளியிடமிருந்து (சூரியன்) தனக்குரிய ஒளியைப் பெறுகின்றாரோ, அந்த சூரியனோடு அவருக்கான நெருக்கம் அதிகரிக்கின்ற நாள் அமாவாசை என்பதை மறந்துவிடக்கூடாது.பெரும்பாலான கிரக தோஷங்களுக்கு, தெய்வ குற்றங்களைவிட, தென்புலத்தார் குற்றம் அதாவது பிதுர் குற்றம்தான் மிக தீவிரமாக இருக்கும் என்பதால்தான் பெரும்பாலோர் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யச் சொல்லுகின்றார்கள். காரணம் பிதுர் குற்றத்தை நீக்கி அவர்களுடைய ஆசிர்வாதத்தைப் பெறுகின்ற நாளாக அமாவாசை விளங்குகின்றது. இந்த ஆசிர்வாதம் கிரக தோஷங்களுக்கு எதிராகச் செயல்பட்டு நன்மையைச் செய்யும்.
The post அமாவாசையும் பரிகாரமும் appeared first on Dinakaran.