×
Saravana Stores

உடுமலை ரயில் நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு

*பயணிகள் பீதி

உடுமலை : உடுமலை ரயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாக உலா வரும் தெரு நாய்களால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.உடுமலை ரயில் நிலையத்திற்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர்.

கோவையிலிருந்து தினமும் (ஞாயிறு தவிர) திண்டுக்கல் வரை இயக்கப்படும் மெமு ரயில், பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில், பாலக்காட்டில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மற்றும் தூத்துக்குடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவற்றில் பயணிக்க உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி மக்கள் அதிக அளவில் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர்.

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் அதிகம் பேர் ரயில் பயணத்தையே மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக நடைமேடை ஒன்று, இரண்டு ஆகியவற்றில் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை பயணிகளின் உடமைகளை கடித்து குதறுவதோடு, பயணிகள் நடைமேடைகளில் அமர்ந்து சாப்பிடும் போது அவர்களை சுற்றி சூழ்ந்து வருகின்றன.

அமராவதி அணை, திருமூர்த்தி அணை, மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்னையில் இருந்து குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகளையும் இவை கூட்டம் கூட்டமாக விரட்டி விரட்டி தொல்லை கொடுத்து வருகின்றன. ரயில் பாதைகளின் ஓரமாக கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளை உண்ணும் தெரு நாய்கள் கூட்டம் ரயில் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடைமேடையில் தூங்குவதோடு, அவ்வப்போது உணவு தேடி ரயில் பயணிகளை விரட்டவும் செய்கிறது.

குழந்தைகளுடன் வரும் பெண்கள் தெரு நாய்களின் கூட்டத்தை கண்டு பீதி அடைகின்றனர்.எனவே, ரயில்வே நிர்வாகம் தெரு நாய்களை பிடித்து அவற்றிற்கு குடும்ப கட்டுப்பாடு செய்து தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உடுமலை ரயில் நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Udumalai railway station ,Udumalai ,Coimbatore ,Dindigul ,
× RELATED புதர் மண்டி கிடக்கும் உடுமலை காவலர் குடியிருப்பு