×
Saravana Stores

திருவொற்றியூரில் ரூ.28 கோடியில் தொடங்கியது; 4 ஆண்டாக முடங்கி கிடக்கும் ரயில்வே சுரங்கப்பாதை பணி.! பொதுமக்கள் தவிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டு அண்ணாமலை நகரில் உள்ள ரயில்வே கேட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள ராஜாஜி நகர், கார்கில் வெற்றி நகர், பாலகிருஷ்ணா நகர், கிராம தெரு, ராஜேஸ்வரி நகர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். இந்த கேட் வழியாக ரயில்கள் செல்லும்போது அடிக்கடி மூடப்படுவதால் மாணவர்கள், தொழிலாளர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ மற்றும் குடிநீர் லாரி போன்றவைகளும் வெகு நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இதையடுத்து பொதுமக்களின் சிரமத்தை போக்க கடந்த 2021ம் ஆண்டு ரூ.28 கோடி செலவில் சுமார் 4 மீட்டர் உள் உயரத்துடன் சுரங்கப்பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறை இணைந்து திட்டமிடப்பட்டது.

இதன்படி மாநகர பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைப்பதோடு, பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக அக்கம்பக்கத்தில் உள்ள 17 வீடுகள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு அகற்றப்பட்டன. இதை தொடர்ந்து ரயில்வே கேட் மூடப்பட்டு பணிகளை துவக்குவதற்கு பூஜையும் போடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் தொடராமல் தடைபட்டது. திட்டப்பணி நடைபெறும் இடத்தை சுற்றி குளங்கள் இருப்பதாகவும், இதனால் ரயில்வே தண்டவாளம் கீழே சுரங்கப்பாதை தோண்டும்போது மணல் சரிவதாக கூறி ரயில்வே துறை அதிகாரிகள் பணிகளை தொடராமல் கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் வழியாக போக முடியாமல் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவசரத்துக்கு பொதுமக்கள், முதியோர், பெண்கள், சிறுவர்கள் மூடப்பட்டிருக்கும் கேட் வழியாக நுழைந்து செல்லும்போது ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, இந்த சுரங்கப்பாதை பணியை விரைவாக முடிக்க கோரி பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் பயனில்லை. இந்நிலையில் சுரங்கப்பாதை பணிகள் குறித்து கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர். அப்போது, பணிகளுக்கான தாமதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 4 மீட்டர் உயரத்திற்கு பதிலாக 2.7 மீட்டர் உயரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக திட்ட வரைவுகளில் மாற்றம் செய்து இதற்கான அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என எம்பி, எம்எல்ஏ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மண் சரிவு ஏற்படுவதால் சுரங்கப்பாதை கட்டுமான உயரத்தை குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு உயரத்தை குறைத்தால் இந்த வழியாக மாநகர பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். எதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதனுடைய முழு பலன் மக்களுக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழலில் மண் சரிவை தடுக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதிகாரிகள் சரியாக திட்டமிடாததால் கடந்த நான்கு வருடங்களாக சுரங்கப்பாதை பணி முடிக்கப்படாமல் கிடப்பதோடு பொதுமக்கள் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் வழியாக போக முடியாமல் சிரமப்படுகின்றனர்’’ என்றனர்.

The post திருவொற்றியூரில் ரூ.28 கோடியில் தொடங்கியது; 4 ஆண்டாக முடங்கி கிடக்கும் ரயில்வே சுரங்கப்பாதை பணி.! பொதுமக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Tiruvotiyur ,Rajaji Nagar ,Kargil Vetri Nagar ,Balakrishna Nagar ,Village Street ,Rajeshwari Nagar ,Thiruvotiyur Mandal ,7th Ward Annamalai Nagar ,Railway Gate Circle ,
× RELATED திருவொற்றியூர் ராஜாஜி நகரில் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்