×
Saravana Stores

தினமும் மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் தூங்கிய கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது: போலீசார் விசாரணை, ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தினமும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்து தூங்கிக்கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஊற்றிய காதல் மனைவியை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மீன் வியாபாரி ரவி (45). இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தம்பதியின் 2 மகன்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

தினமும் மீன் வியாபாரம் செய்துவிட்டு, ரவி மதுபோதையில் வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்துவிட்டு வந்த ரவி, வீட்டிலிருந்த மனைவி ஜெயந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், மன உளைச்சலுக்கு ஆளாகிய ஜெயந்தி, அடுப்பில் கொதித்துகொண்டிருந்த எண்ணெயை எடுத்து வந்து, படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த ரவி மீது ஊற்றியுள்ளார்.

வலியால் துடித்த ரவியின் அலறல் சத்தம்கேட்டு, ஓடிவந்த 2 மகன்களும், ரவியை மீட்டு சிகிச்சைக்காக காட்ரம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, ரவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ரவி தீவிர சிகிச்சை பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவியின் மனைவி ஜெயந்தியை கைது செய்து, சோமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினமும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு வந்ததால், கணவன் தூங்கும்போது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய, காதல் மனைவி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தினமும் மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் தூங்கிய கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது: போலீசார் விசாரணை, ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Kanchipuram district ,Pudunallur ,
× RELATED பொய்யான புகாருக்கு நடவடிக்கை எடுத்த...