×
Saravana Stores

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் ரூ.18.18 கோடியில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் புரிபவர்கள் சர்வதேச தொழில் சந்தையில் போட்டியிட அவர்களின் உற்பத்தி திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், வளர்ந்து வரும் தொழில் பிரிவிற்குள் நுழைய வழி வகை செய்யவும், தமிழ்நாட்டில் 5 இடங்களில் சுமார் ரூ.100 கோடியில் மெகா கிளஸ்டர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தானியங்கி வாகனங்கள், இயந்திரங்கள், மின் மற்றும் மின்னணு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் துல்லிய பொறியியல் பாகங்களை உருவாக்கும் மையமாக கருதப்படும் சென்னை மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழில்முனைவோர் கூட்டமைப்பினருடன் இணைந்து ரூ.47.62 கோடி மதிப்பீட்டில், ரூ.33.33 கோடி அரசு மானியத்துடன் துல்லிய உற்பத்தி பெருங்குழுமம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

பெருங்குழும திட்டத்தின் முதல் பகுதியாக தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.18.18 கோடி செலவில் ரூ.13.33 கோடி மானியத்துடன் வடிவமைப்பு மையம், மறு பொறியியல் பரிசோதனை கூடம், சேர்க்கை உற்பத்தி மையம், மேம்பட்ட பயிற்சி மையம், காப்புரிமை பதிவு வசதி மையம், நவீன பரிசோதனை மையம் போன்றவை நிறுவப்பட்டுள்ளன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 14க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழிற்பேட்டை சங்கத்தினரால் இணைந்து உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கு ஊர்தி மூலம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பொது வசதிகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இளம் தலைமுறை பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பொதுவசதிகளை சென்னை மாவட்டத்தில் 25,000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும், திருமுடிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1,000 தொழில் நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளலாம். இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட உயர் தொழில்நுட்ப பிரிசிஷன் இன்ஜினியரிங் தொழில்நுட்ப மையத்தை (பொது வசதி மையம்) முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

The post குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் ரூ.18.18 கோடியில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Precision ,Engineering Technology ,Center ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,Tamil Nadu ,Engineering ,Technology Center ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED திருமுடிவாக்கத்தில் துல்லிய...