×
Saravana Stores

சோழிங்கநல்லூரில் அரசு குளம் ஆக்கிரமிப்பு: பாஜ பிரமுகர் மீது பொதுமக்கள் புகார்


துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூரில் அரசுக்கு சொந்தமான குளத்தை பாஜ பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்ததால் அவர் மீது பொதுமக்கள் புகார் செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 198வது வார்டுக்குட்பட்ட காரப்பாக்கம் பகுதியில் சர்வே எண் 89ல் 3 ஏக்கர் பரப்பளவில் பெரிய கேணிகுளம் உள்ளது. மழைக்காலங்களில் இப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் இந்த குளத்துக்கு வரும். அதனால் இந்த குளம், இப்பகு மக்களுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், இந்த நிலத்தின் ஒரு பகுதியை 198வது வார்டு கவுன்சிலரும் பாஜ ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவர் சுந்தரம் ஆக்கிரமிப்பு செய்து சுற்று சுவர் அமைப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சோழிங்கநல்லூர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதே நேரத்தில் இச்சம்பவம் குறித்து உயரதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அதனால் அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விற்று வருகின்றனர். இந்நிலையில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட காரப்பாக்கம் பகுதியில் சர்வே எண் 89ல் உள்ள பெரிய கேணி குளத்தின் ஒரு பகுதியை 198வது வார்டு கவுன்சிலரும் பாஜ ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சுந்தரம் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுசுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

அது மட்டும் அல்லாமல் இக்குளத்தின் ஒரு பகுதியை தனியார் நிலத்திற்கு செல்வதற்காக ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்து கொடுத்துள்ளனர். மேலும் கடந்தாண்டு ஆகஸ்ட் 18ம் தேதி இதே போன்று குளத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்ட முயற்சித்த போது எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

The post சோழிங்கநல்லூரில் அரசு குளம் ஆக்கிரமிப்பு: பாஜ பிரமுகர் மீது பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Chozhinganallur ,BJP ,Durai Pakkam ,Choshinganallur ,Karapakkam ,Chennai Corporation ,zone ,Govt ,Chozinganallur ,Dinakaran ,
× RELATED துரைப்பாக்கம் ஒக்கியம் மடுவில் மூதாட்டி சடலம் மீட்பு: கொலையா என விசாரணை