- நீதிமன்றம்
- செங்கல்பட்டு
- சென்னை உயர் நீதிமன்றம்
- சிர்காஜி சத்யா
- செங்கல்பட்டு மாவட்டம்
- மாமல்லபுரத்தில்
- பாஜக
- வழக்கறிஞர் பிரிவு செயலாளர்
- அலெக்சிஸ் சுதாகரின்
- தின மலர்
செங்கல்பட்டு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தலைமறைவான பிரபல ரவுடி சீர்காழி சத்யாவை பிடிக்க ஆய்வாளர் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பாஜ வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகரின் பிறந்த நாளில் பங்கேற்க வந்த பிரபல ரவுடி சீர்காழி சத்யாவை கடந்த ஜூன் மாதம் போலீசார் கைது செய்தனர்.
அவர்மீது 5 கொலை உள்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பின்னர் ரவுடி சீர்காழி சத்யா, மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி, குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவுடி சீர்காழி சத்யா மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றம் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்தது. மேலும், அவர் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ரவுடி சீர்காழி சத்யா நிறைவேற்றாததால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்த உத்தரவை, கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரும்பப் பெற்றனர். மேலும், ரவுடி சீர்காழி சத்யாவை மீண்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, தலைமறைவான பிரபல ரவுடி சீர்காழி சத்யாவை பிடிக்க மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில், 2 எஸ்ஐக்கள் உள்பட 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரை கைது செய்தபின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
The post உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து தலைமறைவான ரவுடியை பிடிக்க போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.