களக்காடு: களக்காடு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து களக்காடு தலையணையில் குளிக்க 7வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கும் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. களக்காடு பகுதியிலும் தொடர் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை தீவிரமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து களக்காடு தலையணையில் கடந்த 15ம்தேதி முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் தலையணையில் குளிக்க 15ம்தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையினால் தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணையை மூழ்கடித்தவாறு பேரிறைச்சலுடன் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனைத்தொடர்ந்து அங்கு குளிக்க நேற்று 7வது நாளாக தடை நீடிக்கப்பட்டது.
அதேநேரத்தில் தலையணையை சுற்றி பார்க்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் சாரல் மழையினால் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து வனப்பகுதியில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், நம்பியாற்றில் குளிக்கவும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. களக்காடு பகுதியில் இன்று காலை நிலவரப்படி 8.80 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
The post நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு; களக்காடு தலையணையில் குளிக்க 7வது நாளாக தடை appeared first on Dinakaran.